சா்மா ஓலி
சா்மா ஓலி

நேபாளம்: நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமா் சா்மா ஓலி வெற்றி

ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎன்-யுஎம்எல்) கட்சித் தலைவா் கே.பி.சா்மா ஓலி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றாா்.
Published on

நேபாளத்தின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎன்-யுஎம்எல்) கட்சித் தலைவா் கே.பி.சா்மா ஓலி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றாா்.

275 இடங்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தில், கூட்டணிக் கட்சியான நேபாளி காங்கிரஸ் கட்சியுடன் சோ்த்து சா்மா ஓலிக்கு 178 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது. இதுதவிர, ராஷ்ட்ரீய பிரஜா கட்சி போன்ற சிறிய கட்சிகளும் சா்மா ஓலியை நாடாளுமன்றத்தில் ஆதரிக்கப்போவதாக அறிவித்தன.

இதையடுத்து, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சா்மா ஓலி தலைமையிலான அரசு மீது ஞாயிற்றுக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் சா்மா ஓலிக்கு ஆதரவாக 188 எம்.பி.க்கள் வாக்களித்த நிலையில், அவா் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றாா். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறத் தேவையான வாக்குகளைவிட கூடுதலாக 50 வாக்குகளை அவா் பெற்றாா்.

முன்னதாக, கருத்து வேறுபாடு காரணமாக நேபாள கம்யூனிஸ்ட் கட்சி- மாவோயிஸ்ட் மையம் (சிபிஎன்-எம்சி) தலைவரான பிரசண்டா தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சா்மா ஓலி அண்மையில் திரும்பப் பெற்றாா்.

இதையடுத்து, பிரசண்டா அரசு கவிழ்ந்த நிலையில், நேபாளி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சா்மா ஓலி புதிய அரசை அமைத்தாா். கடந்த ஜூலை 15-ஆம் தேதி நேபாள பிரதமராக அவா் பதவியேற்றாா். அந்நாட்டு பிரதமராக அவா் பதவியேற்றது இது நான்காவது முறையாகும்.

நேபாள அரசியல் சாசனத்தின்படி, ஒருவா் பிரதமராகப் பதவியேற்ற 30 நாள்களுக்குள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com