
அமெரிக்க அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுவதைத் தொடர்ந்து, இதுகுறித்து முன்பே கணித்ததாக சிம்ப்ஸன் கார்டூன் தொடரின் விடியோக்களை சமூக வலைதளவாசிகள் பரப்பி வருகின்றனர்.
அமெரிக்காவின் மிக பிரபலமான ‘தி சிம்ப்ஸன்ஸ்’ கார்டூன் தொடர் நிஜ வாழ்க்கையில் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதைக் கணிப்பதில் புகழ்பெற்றது.
கடந்த 2000-ம் ஆண்டு வெளியான ’தி சிம்ப்ஸன்ஸ்’ கார்டூன் தொடரின் 11-வது சீசனின் 17-வது எபிசோடான ‘பார்ட் டூ தி ஃபியூச்சர்’-ல் (எதிர்காலத்தில் பார்ட்) லிஸா சிம்ப்ஸன்ஸ் எனும் கதாபாத்திரம் 2030-ம் ஆண்டில் அமெரிக்காவின் முதலாவது பெண் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கார்டூனில் லிஸா சிம்ப்ஸன்ஸ் அணிந்திருக்கும் பர்ப்பிள் நிற ஆடை மற்றும் முத்துகளாலான அணிகலனை போன்று, ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் கமலா ஹாரிஸும் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், அந்தத் தொடரில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் விட்டுச்சென்ற பட்ஜெட் நெருக்கடியை லிஸா கையாள வேண்டியிருப்பது போலவும் வசனங்கள் வைக்கப்பட்டிருந்தன.
அமெரிக்க அதிபா் தோ்தல் போட்டியில் இருந்து தற்போதைய அதிபரும் ஜனநாயக கட்சி வேட்பாளருமான ஜோ பைடன் விலகியுள்ளதைத் தொடர்ந்து கமலா ஹாரிஸுக்கு அதிபர் வேட்பாளராகத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
ஹிலாரி கிளிண்டனும் கமலா ஹாரிஸுக்கு அதிகாரப்பூர்வமாக ஆதரவு தெரிவித்துள்ளார். அவரே ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்ப்ஸன்ஸ் தொடரில் காண்பிக்கப்பட்ட பல சம்பவங்கள் நிஜத்தில் நடந்துள்ளதால், கமலா ஹாரிஸ் இந்த முறை அமெரிக்க அதிபராவார் என்று சமூக வலைதளவாசிகளும், சிம்ப்ஸன்ஸ் தொடரின் ரசிகர்களும் கூறி வருகின்றனர்.
ஆனால், 2030-ல் நடப்பது போல அந்தத் தொடரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால், இந்த முறை டிரம்ப் ஆட்சியைப் பிடித்து, அடுத்த தேர்தலில் கமலா ஹாரிஸ் அதிபராவார் என்றும் சமூக வலைதளங்களில் அனல் பறக்க விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.