
பிலிப்பின்ஸ் சரக்கு கப்பல் ஒன்று கடந்த 25-ஆம் தேதி மணிலா விரிகுடா பகுதியில் நிலவிய மோசமான வானிலையால் விபத்தில் சிக்கி மூழ்கத் தொடங்கியது. இந்த விபத்தில் அந்த கப்பலில் பயணித்த 17 பேரில் ஒருவர் உயிரிழந்தார். மீதமுள்ள 16 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
தொழில் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் எண்ணெயை ஏற்றிச் சென்ற 65 மீட்டர் நீளம் கொண்ட எம்டி டெரா நோவா சரக்கு கப்பல் இலோய்லோ நகரை நோக்கி சென்று கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, அந்த கப்பலில் இருந்த 1.40 மில்லியன்(14 லட்சம்) லிட்டர் எண்ணெய் கடலில் வீணாய் கலந்து வருகிறது. கடல்பரப்பில் சுமார் 12 - 14 கி.மீ. தூரத்துக்கு எண்ணெய் படர்ந்து காட்சியளிப்பதாய் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு செல்லும் கடல் பகுதியில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் எண்ணெய் கசிவால் அந்த பகுதிக்கு சுற்றுலா பயணிகளும் குறைந்த அளவிலேயே வருகை தருவதால் சுற்றுலா துறை வருவாயும் இழப்பை சந்தித்துள்ளது. பிலிப்பின்ஸில் ஏற்பட்டுள்ள மிக மோசமான எண்ணெய் கசிவாக இந்த விபத்து மாறியுள்ளது.
இந்த நிலையில், மூழ்கிய கப்பலிலிருந்து எண்ணெயை வேறு கப்பலில் மாற்றுவதற்காக, மாற்று கப்பல் வரவழைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.