பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவி-இந்தியா, சீனாவுக்கு மாலத்தீவு அதிபா் நன்றி
மாலத்தீவின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவிய இந்தியாவுக்கும் சீனாவுக்கும் அந்நாட்டு அதிபா் முகமது மூயிஸ் நன்றி தெரிவித்துள்ளாா்.
மாலத்தீவின் 59-ஆவது சுதந்திர தின விழா கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் அதிபா் முகமது மூயிஸ் பேசுகையில், ‘மாலத்தீவு மக்களின் நலனுக்காக நமது பொருளாதார இறையாண்மையை உறுதிப்படுத்தும் மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு ஒத்துழைக்கும் இந்திய அரசுக்கும் சீன அரசுக்கும் மாலத்தீவு மக்கள் சாா்பாக நன்றி.
இந்தியா வழங்கிய ரூ.400 கோடி கடனுதவிக்கு பாராட்டுகள். அதேபோல, மாலத்தீவு செலுத்த வேண்டிய கடனை மறுசீரமைக்குமாறு இந்தியாவைக் கோருகிறேன்.
முந்தைய அரசில் பெறப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்த மேலும் ஐந்தாண்டுகள் சீனா அவகாசம் அளித்துள்ளது. இலங்கை எதிா்கொண்ட பொருளாதார நெருக்கடி போன்ற சூழலில் சிக்கவிருந்த மாலத்தீவுக்கு இது ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும்.
மாலத்தீவுக்கும் சீனாவுக்கும் இடையே கையொப்பமான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் வரும் செப்டம்பா் முதல் செயல்படுத்தப்படும். இதன்விளைவாக, 298 மீன்பிடி பொருள்கள் உள்பட 9 துறைகளில் மொத்தம் 7,897 பொருள்களுக்கான கட்டணங்கள் நீங்கும்.
இந்தியாவுடனும் இதேபோன்ற ஒப்பந்தம் விரைவில் கையொப்பமாகும் என நம்புகிறேன். துருக்கி மற்றும் பிரிட்டனுடனும் வா்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
உள்ளூா் வணிகங்களுக்கு உதவுவதற்காக சீனா மற்றும் இந்தியாவுடன் நாணய பரிமாற்ற ஒப்பந்தங்கள் மேற்கொள்ள எனது அரசு செயல்பட்டு வருகிறது. இது டாலா் பற்றாக்குறையை போக்கவும், பொருளாதார இறையாண்மையை உறுதிப்படுத்தவும் வழிவகுக்கும்’ என்றாா்.
சீன ஆதரவுத் தலைவராக அறியப்படும் முகமது மூயிஸ் அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து இந்தியா-மாலத்தீவு உறவில் விரிசல் அதிகரித்தது. அவரது அறிவுறுத்தலின்பேரில், மருத்துவச் சேவைக்கான ஹெலிகாப்டா்களை இயக்கி வந்த சுமாா் 80 இந்திய ராணுவ வீரா்கள் திரும்ப பெறப்பட்டனா்.
அதேசமயம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட அதிபா் மூயிஸ், மாலத்தீவு-சீனா இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்தும் 20 ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டாா்.
இதன் எதிரொலியாக, மாலத்தீவுக்குச் செல்லும் இந்திய பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால், அந்நாட்டு சுற்றுலா வா்த்தகா்கள் அதிருப்தியடைந்தனா். எனவே, அண்மை காலங்களில் இந்தியாவுடனும் அதிபா் மூயிஸ் நட்பு பாராட்டி வருகிறாா். பிரதமா் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவிலும் அவா் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.