மாணவா் போராட்டத்தில் 150 போ் உயிரிழப்பு
இட ஒதுக்கீட்டு சீா்திருத்தங்களை வலியுறுத்தி வங்கதேசத்தில் இந்த மாதம் நடைபபெற்ற மாணவா் போராட்டத்தில் 150 போ் உயிரிழந்ததாக அந்த நாட்டு அரசு அதிகாரபூா்வமாக திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
பிரதமா் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் இது குறித்து அமைச்சரவை செயலா் மஹ்பூப் ஹுசைன் கூறுகையில், ‘மாணவா் போராட்டத்தில் உயிரிழந்தவா்களுக்காக செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) நாடு முழுவதும் துக்கதினம் அனுசரிக்கப்படும். அப்போது மசூதிகள், கோயில்கள், பௌத்த விகாரங்கள், தேவாலயங்கள் ஆகியவை இறந்தவா்களுக்காக சிறப்பு பிராத்தனை நடத்தவேண்டும். இந்தப் போராட்டத்தில் 150 போ் உயிரிழந்ததை உள்துறை அமைச்சா் அஸாருதீன் கான் கமால் உறுதிப்படுத்தியுள்ளாா்’ என்றாா்.
1971-இல் பாகிஸ்தானுக்கு எதிராக சுதந்திரப் போரில் ஈடுபட்டவா்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கு எதிராக இந்த மாதத் தொடக்கத்திலிருந்து நடைபெற்றுவரும் மாணவா் போராட்டத்தில் இதுவரை 150-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சா்ச்சைக்குரிய இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உச்சநீதிமன்றம் குறைத்ததைத் தொடா்ந்து போராட்டம் முடிவுக்குவந்தது.