
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், தனது டீன் ஏன் வயது மகள் கிம் ஜூஏ-வை தனக்குப் பிறகு அதிபர் பதவியில் அமர்த்துவதற்கான ஏற்பாடுகள் செய்துவருவதாக, தென் கொரிய புலனாய்வு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
என்ஐஎஸ் எனப்படும் தென்கொரிய புலனாய்வு அமைப்பு வெளியிட்டிருக்கும் தகவலில், வடகொரியாவின் அடுத்த அதிபர் பதவிக்கான வாரிசாக மகளை அறிவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார் என கூறப்பட்டுள்ளது.
கிம் ஜூ ஏ-வின் அதிகாரப்பூர்வ வயது இதுவரை வெளியாகாத நிலையில், அவருக்கு ஏறத்தாழ 12 வயது இருக்கும் என கூறப்படுகிறது. அண்மையில், தந்தை பங்கேற்ற சில அரசு நிகழ்ச்சிகளில், அவரது மகளும் பங்கேற்றிருந்தார். குறிப்பாக ராணுவம் தொடர்பான நிகழ்ச்சிகளில் அதிகம் கிம் ஜாங் உன் தனது மகளுடன் பங்கேற்றிருந்தது புகைப்படங்கள் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிம் ஜாங்கின் மகள் பங்கேற்ற பெரும்பாலான நிகழ்ச்சிகள், வடகொரிய நாட்டின் ராணுவப் பயிற்சி போன்றவையாக அமைந்திருந்ததாக ஏபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இதுவும், தென்கொரிய புலனாய்வு அமைப்பு வெளியிட்ட தகவலும் கிட்டத்தட்ட பொருந்திப்போகிறது. அந்நாட்டு அரசு ஊடகமும், கிம் ஜாங்கின் மகளை, வழிகாட்டுவதற்கு மிகச் சிறந்த நபர் என அடையாளப்படுத்துகிறது. இதுவும், வட கொரிய அதிபர் பதவிக்கான அடுத்த வாரிசாக இவரை உறுதி செய்யும் தகவல்களாக அமைகின்றன.
இதனுடன், இவ்வளவு விரைவாக, வட கொரியா அதிபர் பதவிக்கான அடுத்த நபரைத் தேர்வு செய்யக் காரணம், கிம் ஜாங் உன்-னின் உடல்நிலைதான் என கூறப்படுகிறது. அவர் அதிக உடல் எடையுடன் உள்ளார். கிட்டத்தட்ட 140 கிலோ எடையிருப்பதாகவும், இது இதயம் சார்ந்த பிரச்னைகளுக்கு வழி வகுக்கும் என்பதாலும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கருதப்படுகிறது.
இவரது தந்தை மற்றும் தாத்தா இருவருமே இதய நோயால்தான் மரணமடைந்திருக்கிறார்கள். இவருக்கும், 30 வயது முதலே நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.