
ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியான் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அந்நாட்டின் தலைநகர் தெஹ்ரானுக்கு பயணம் மேற்கொண்ட இஸ்மாயில் ஹனியா(62), இன்று(ஜூலை 31) அதிகாலை கொல்லப்பட்டுள்ளார். உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் இஸ்மாயில் ஹனியா தங்கியிருந்த கட்டடத்தை நோக்கி வான்வழி ஏவுகணை மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் இஸ்மாயில் ஹனியா உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து ஏவுகணை எங்கிருந்து அனுப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களை ஈரான் ராணுவம் சேகரித்து வருகிறது. இச்சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
லெபனானில் இஸ்ரேல் நிகத்தியுள்ள தாக்குதல்களில் ஹிஸ்புல்லா படையின் முக்கியத் தலைவர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில், சில மணி நேரங்களிலேயே ஹமாஸ் தலைவர் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹனியா மீதான தாக்குதலைக் கண்டித்து மேற்கு கரை பகுதியில் ஏராளமான பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை(ஆக. 2) கத்தார் நாட்டில் ஹனியாவின் உடல் நல்லடக்கம் செய்யபடுமெனத் தெரிவிக்கபட்டுள்ளது.
ஹமாஸ் தலைவர் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம் என ஹமாஸ் படையும் ஈரானும் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
இஸ்மாயில் ஹனியா கொல்லப்பட்டிருத்து ஹமாஸ் படைக்கு பின்னடைவாகப் பார்க்கப்பட்டாலும், இதனால் தாங்கள் அடிபணியப்போவதில்லை என ஹமாஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மோதல் போக்கை அதிகரிக்கச் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டிருப்பதால் காஸா போர்நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காஸா போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை முன்னெடுத்துவரும் கத்தார், அமெரிக்கா, எகிப்து நாட்டின் தலைவர்களை இந்த தாக்குதல் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையடுத்து அமெரிக்க உள்துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கனுடன் கத்தார் பிரதமர் ஷேக்முகமது பின் அப்துல்ரஹ்மான், காஸா போர்நிறுத்தம் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று ஆலோசனை நடத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.