போரின் விளிம்பில் இஸ்ரேல் - ஹிஸ்புல்லா!

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் எழுந்த புகை மண்டலம்.
லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் எழுந்த புகை மண்டலம்.
Published on
Updated on
2 min read

"ஹிஸ்புல்லாக்கள் இங்கே நெருப்பு வைக்கிறார்கள். லெபனானில் உள்ள அவர்களது நிலைகளும் அதே போல் தீக்கிரையாக்கப்பட வேண்டும். அவர்கள் அனைவரும் அழிக்கப்பட வேண்டும். போர்தான் இதற்குத் தீர்வு!'

இஸ்ரேலுக்குள் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் கடந்த திங்கள்கிழமை ஏவுகணைகளை வீசி தாக்கியதைத் தொடர்ந்து, அந்த நாட்டுக்கான தேசிய பாதுகாப்பு விவகார அமைச்சர் பென் கிவிர் கூறியது இது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், "எங்கள் நாட்டில் தாக்குதல் நடத்திவிட்டு, பதிலடியிலிருந்து தப்பிவிடலாம் என்று யாராவது நினைத்தால், அவர்கள் மிகப் பெரிய தவறு செய்கிறார்கள் என்று அர்த்தம். வடக்கு இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாங்கள் எதை வேண்டுமானாலும் செய்வோம். எனவே, ஹிஸ்புல்லாக்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கையை எடுக்கத் தயாராகிவிட்டோம்' என்றார்.

ஹிஸ்புல்லாக்களுக்கு எதிரான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை திட்டம் எவ்வாறு இருக்கும் என்பதை அந்த நாட்டு நிதியமைச்சர் பெஸாலெல் ஸ்மாட்ரிச் கூறியதைக் கொண்டு ஓரளவு ஊகிக்க முடியும்.

"இஸ்ரேல் பகுதியிலிருந்து தெற்கு லெபனானின் கலீலி பகுதிக்கு தரைவழியாக தாக்குதல் நடத்தி முன்னேற வேண்டும். அந்தப் பகுதியை ஆக்கிரமித்து, ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை விரட்டவேண்டும். அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களிடையேதான் ஹிஸ்புல்லாக்கள் ஒளிந்துள்ளனர்.

எனவே, பொதுமக்களையும் சேர்த்து அங்கிருப்பவர்கள் அனைவரையும் லிடானி நதிக்கு அப்பால் துரத்த வேண்டும்' என்பதுதான் ஸ்மாட்ரிச் வெளியிட்ட திட்டம். அவர் கூறும் லிடானி நதியின் மறுகரை இஸ்ரேல் எல்லையிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பும், இஸ்ரேலுடனான முழு போருக்குத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் துணைத் தலைவர் ஷேக் நயீம் காசிம் கூறுகையில், "தற்போது இஸ்ரேலுக்கும் எங்களுக்கும் இடையே நடந்துவரும் மோதல் முழு போராக உருவெடுப்பதை நாங்கள் விரும்பவில்லை. இருந்தாலும், அத்தகைய ஒரு போர் வெடித்தால் அதை எதிர்கொள்வதற்கு முழு ஆயத்தமாக இருக்கிறோம். போரை இஸ்ரேல் விரிவுபடுத்தினால் மிகப் பெரிய அழிவை அந்த நாடு சந்திக்க வேண்டியிருக்கும்' என்று எச்சரித்தார்.

இந்த அறிக்கைகள், இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாக்களும் இடையே முழு போர் வெடிப்பதற்கான அபாயத்தை வெளிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, "ஹிஸ்புல்லாக்களுடன் முழு போர் வெடித்தால் லெபனான் இன்னொரு காஸாவாகும்' என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ள நிலையில், இப்போது ஏற்பட்டுள்ள பதற்றச் சூழல் சர்வதேச நாடுகளுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

காஸா போர் தொடங்கியதற்குப் பிறகு இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள சிறு மோதல்கள் முழு போராக உருவெடுப்பதைத் தடுப்பதற்காக தூதரக ரீதியில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இஸ்ரேலுடன் சமாதானம் செய்துகொள்ள ஹிஸ்புல்லாக்கள் தயாராக இருந்தாலும், அதற்கு காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்கின்றனர். ஆனால், அதுதான் எட்டாக்கனியாகவே இதுவரை இருந்து வருகிறது.

இஸ்ரேலும் வடக்குப் பகுதியின் பாதுகாப்பை தூதரக ரீதியில் உறுதி செய்துகொள்ளத் தயார் என்று கூறுகிறது. ஆனால், அதற்காக ராணுவ ரீதியிலான தீர்வைக் கைவிடுவதற்கு அந்த நாடு தயாராக இல்லை.

இந்தச் சூழலில்தான் ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேலும் போரின் விளிம்புக்கு வந்துள்ளன.

இரு தரப்பினருக்கும் இடையே போர் நடப்பது இது முதல்முறை அல்ல. ஹிஸ்புல்லா அமைப்பு உருவாக்கப்பட்டதே இஸ்ரேலுக்கு எதிராகத்தான். லெபானானை ஆக்கிரமித்த இஸ்ரேல் படையினரை அங்கிருந்து விரட்டுவதற்காக 1982-இல் ஈரானால் உருவாக்கப்பட்ட ஹிஸ்புல்லா படை, சுமார் 18 ஆண்டுகளாக கொரில்லா போர் நடத்தி இஸ்ரேலை வெளியேற்றியது.

கடைசியாக இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 2006-இல் நடைபெற்ற 34 நாள் போரில் 270 ஹிஸ்புல்லாக்கள் உள்பட 1,200 லெபனான் நாட்டவர்கள் உயிரிழந்தனர்; 4,400 பேர் காயமடைந்தனர்; 9.74 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களில் 2 லட்சம் பேர் இன்னும் கூட வீடு திரும்பவில்லை.

அந்தப் போரில் இஸ்ரேல் தரப்பில் 158 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் லெபனானில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள். இது தவிர, ஹிஸ்புல்லாக்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலில் 43 பேர் உயிரிழந்தனர்; 1,500 பேர் காயமடைந்தனர்; 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி தவித்தனர்.

அதன் பிறகு தற்போதுதான் அதே போன்ற முழுமையான போர் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

ஆனால், இப்போதைய நிலைமை முன்பைப் போல் இல்லை. 2006-க்குப் பிறகு ஹிஸ்புல்லா அமைப்பினர் தங்களது படைபலத்தை பல மடங்கு அதிகரித்துள்ளனர். அவர்களிடம் அதி நவீன ஆயுதங்கள், முன்பைவிட அதிக துல்லியமாக இலக்குகளைத் தாக்கக்கூடிய உயர் தொழில்நுட்ப ஏவுகணைகள், ஆயுத தளவாடங்கள் குவிந்துள்ளன.

எனவே, இந்த முறை முழு போர் வெடித்தால் இரு தரப்பிலும் மிகப் பெரிய உயிர்ச் சேதத்தையும் பொருள் சேதத்தையும் அது ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

அத்தகைய போரைத் தவிர்க்க அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கடும் முயற்சி மேற்கொண்டு வந்தாலும், காஸா போர் தொடரும்வரை இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர் அபாயமும் தொடரும் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com