மலாவி துணை அதிபர் பலி: விபத்தில் சிக்கிய விமானம் மீட்பு! அரசியல் சதியா?

மலாவி துணை அதிபர் பயணித்த விமானம் விபத்தில் சிக்கியது; சிதைந்த பாகங்கள் மீட்பு
உயிரிழந்த துணை அதிபர் சாவ்லஸ் சிலிமா (கோப்புப் படம்)
உயிரிழந்த துணை அதிபர் சாவ்லஸ் சிலிமா (கோப்புப் படம்)ஏஎஃப்பி

மலாவி நாட்டின் துணை அதிபர் உடன் 9 பேர் பயணித்த, விபத்துக்குள்ளான விமானம் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் லாசரஸ் சாக்ரா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

தேடுதல் பணி ஒரு நாளுக்கு மேலாக நீடித்த நிலையில் விமானத்தின் சிதைந்த பாகங்கள் நாட்டின் வடக்கில் உள்ள மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் பயணித்த துணை அதிபர் சாவ்லஸ் சிலிமா உள்ளிட்ட யாரும் விபத்தில் உயிர் தப்பவில்லை என அரசு ஊடகத்தில் மலாவி நாட்டு அதிபர் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

அதிபர் லாசரஸ் சாக்ரா
அதிபர் லாசரஸ் சாக்ராஏஎஃப்பி

முன்னாள் அதிபரின் மனைவி சனில் ஜிமிரி, 51 வயதான துணை அதிபர் உள்ளிட்ட 7 மேல்நிலை தலைவர்கள், 3 விமானிகள் குழு பயணித்த புரோபெல்லர் விமானம் ஆப்பிரிக்க நாடான மலாவியின் தலைநகர் லிலாங்வேயில் இருந்து 370 கிமீ தொலைவில் உள்ள மிஷுசு நகருக்கு திங்கள்கிழமை காலை புறப்பட்டுச் சென்றுள்ளது.

அங்கு மோசமான வானிலை காரணமாக தரையிறக்குவதில் சிரமம் ஏற்படவே விமானம் மீண்டும் லிலாங்க்வேக்கு திருப்பப்பட்டுள்ளது.

அதன் பிறகு ரேடாரில் இருந்து விமானம் மறைந்துள்ளது. கடைசியாக சிக்னல் பெறப்பட்ட இடத்திலிருந்து 10 கிமீ சுற்றுப் பகுதியில் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

அவர்கள் பயன்படுத்தியது, 1988-ல் மலாவிய ராணுவத்துக்கு அளிக்கப்பட்ட இரட்டை புரோபெல்லர் விமானம் எனத் தெரிகிறது.

தேடுதல் பணியில் 600-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் விமானம் கண்டறியப்படும்வரை தேடுதலை தொடரவும் மலாவி அதிபர் ஆணையிட்டதாக தெரிவித்திருந்தார். அமெரிக்கா, பிரிட்டன், நார்வே மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் தேடுதலுக்கு, சிறப்புமிக்க தொழில்நுட்பம் அளித்து உதவுவதாகவும் குறிப்பிட்டார்.

2.1 கோடி மக்கள்தொகை கொண்ட மலாவி- உலகின் நான்காவது ஏழை நாடாக 2019-ல் உலக வங்கியில் அறிவிக்கப்பட்டது. சிலிமாவின் ஒருங்கிணைந்த மாற்றங்களுக்கான இயக்கக் கட்சி (அதிபரின் கட்சியிலிருந்து வேறுபட்டது) அரசின் செயல்பாடுகள் மெதுவாக நடைபெறுவதாகவும் கம்பியில்லா கண்காணிப்பு மற்றும் தொலைத்தொடர்பு கருவியான டிரான்ஸ்பாண்டர் விமானத்தில் இல்லையெனவும் மேல்மட்ட தலைவர்களை அழைத்துச் செல்ல இத்தகைய விமானம் பயன்படுத்தப்பட்டது குறித்தும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

சிலிமாவின் யுடிஎம் கட்சி பொதுச் செயலர் பெட்ரிசியா கலியாட்டி ஆதரவாளர்களைச் சந்தித்தபோது..
சிலிமாவின் யுடிஎம் கட்சி பொதுச் செயலர் பெட்ரிசியா கலியாட்டி ஆதரவாளர்களைச் சந்தித்தபோது..ஏஎஃப்பி

சிலிமா, இரண்டாவது முறையாக துணை அதிபராக பணியாற்றினார். 2014-2019 வரை முன்னாள் அதிபர் பீட்டர் முதாரிகா அரசில் துணை அதிபராக பணியாற்றியவர், 2019 அதிபர் போட்டியில் களமிறங்கினார். முதாரிகா மற்றும் சாக்ராவுக்கு அடுத்து இவர் இடம்பெற்றார். இந்த ஒட்டெடுப்பு நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.

ஆட்சியில் உள்ள அதிபரை நீதிமன்ற தீர்ப்பு பதவியிழக்கச் செய்தது அந்நாட்டில் அதுவே முதன்முறை. அதன் பிறகு சிலிமா, சாக்ராவுக்கு ஆதரவாக இணைந்தார். 2020-ல் மீண்டும் நடத்தப்பட்ட அதிபர் தேர்தலில் சாக்ரா வெற்றிப் பெற அவர் உதவினார்.

மேலும், மலாவி ராணுவம் மற்றும் காவல் படைக்கு கொள்முதல் செய்வதில் மோசடி செய்ததாக சிலிமா ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானார். ஆனால் இந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது.

சமீபத்தில் தென்கொரியா சென்று திரும்பியவர் விபத்துக்குள்ளானது அரசியல் அரங்கில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com