
கிண்ணம் நிறைய சுவை நிறைந்த நூடுல்ஸை நிரப்பி சாப்பிடுவதில் கொள்ளைப் பிரியம் கொண்டவராக இருந்தால், நிச்சயம் இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.
தென் கொரியாவைச் சேர்ந்த சாம்யாங் நிறுவனத்தின் நூடுல்ஸ் வகைகளுக்கு் சிவப்புக் கொடி காட்டப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் மசாலா நூடுல்ஸ் பாக்கெட்டுகளுக்கு டென்மார்க் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளதையடுத்து பல வகையான நூடுல்ஸ்கள் விற்பனையிலிருந்து திரும்பப்பெறப்பட்டுள்ளன.
பல்டக் 3x ஸ்பைஸி, ஹாட் சிக்கன், 2x ஸ்பைஸி-ஹாட் சிக்கன் போன்ற வகை வகையான நூடுஸ்கள் திரும்பப்பெறப்பட்டுள்ளன. காரணம், பலரும் விரும்பி உண்ணும் நூடுல்ஸ், மனிதர்களை மெல்ல கொல்லும் விஷமாக இருப்பதே.
இந்த நூடுல்ஸில் அதிகக் காரத்தை சேர்க்க பயன்படுத்தப்படும் மிளகாயின் சேர்மமான கேப்சைசின் என்ற வேதிபொருள், அதிகளவில் கலந்திருப்பது, நுகர்வோருக்கு நஞ்சாக மாறும் என்று டானிஷ் கால்நடை மற்றும் உணவுக் கட்டுப்பாட்டுத் துறை பிறப்பித்த எச்சரிக்கையை அடுத்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த உணவுக் கட்டுப்பாட்டு அமைப்பானது, மக்கள் உடடினயாக இந்த வகை உணவுகளை சாப்பிட வேண்டாம், தூக்கி எறியுங்கள் என்று வலியுறுத்தியிருக்கிறது. இந்த நூடுல்ஸ்களில் கேப்சைசின் அளவுக்கு அதிகமாகக் கலந்திருப்பதே காரணம், அது மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். இது தொடர்பாக எந்தக் குறிப்பிட்ட சம்பவமும் நடக்கவில்லை. முதலில் இது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும், அளவுக்கு அதிகமாகவோ அல்லது தொடர்ந்து சாப்பிடும்போது உடல் உபாதைகளை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவின் உணவுப்பொருள் தயாரிப்பில் சாம்யாங் முன்னணியில் இருப்பதும், 1960ஆம் ஆண்டு முதல் சாம்யாங் நூடுல்ஸ் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதும், இவ்வளவு பெரிய நிறுவனம் தற்போது உணவு தரக்கட்டுப்பாட்டு அளவில் விமர்சனத்தைப் பெற்றிருப்பது அந்நிறுவனத்தின் தயாரிப்புப் பொருள்களை விரும்பி சாப்பிடும் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.