
மெக்காவில் கடும் வெப்ப அலை வீசி வரும் நிலையில், ஹஜ் புனித பயணம் மேற்கொண்டு பல்வேறு நாட்டைச் சேர்ந்த 922 பயணிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில், இந்தியாவைச் சேர்ந்த 80 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில், அவர்களை தேடும் பணியில் உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொண்ட 9 பேர் உயிரிழந்ததாகவும், அவர்களில் இருவர் சாலை விபத்திலும் மற்றவர்கள் வெப்ப அலை மற்றும் வயதுமூப்பு காரணமாக ஏற்பட்ட பிரச்னைகளாலும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் ஹஜ் புனித பயணம் மேற்கொள்வது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான ஹஜ் புனித யாத்திரை ஜூன் 14-ல் தொடங்கியது. தியாக திருநாளைக் கொண்டாடும் வகையில் சௌதி அரேபியாவிலுள்ள புனித நகரமான மெக்காவில் இந்தாண்டு 18 லட்சம் பேர் வரை திரண்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்தாண்டு சௌதி அரேபியாவில் கடும் வெப்பம் நிலவி வருகின்றது. வெப்ப தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறத. மெக்காவில் நாள்தோறும் 50 டிகிரி செல்சியஸை கடந்து வெப்பம் பதிவாகி வருகின்றது.
இதனால், வெப்பம் தாங்க முடியாமல் 922 பேர் உயிரிழந்துள்ளதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதில், 600 பேர் எகிப்து நாட்டைச் சார்ந்தவர்கள் என்றும், மேலும், 1,400-க்கும் அதிகமான எகிப்து நாட்டவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் தேடி வருவதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து 1.75 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொண்ட நிலையில், இதுவரை 80 பேர் வெப்பம் தாங்காமல் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மேலும், ஜோர்டான், இந்தோனேசியா, ஈரான், செனகல், துனிசியா மற்றும் குர்திஸ்தான் ஆகிய நாடுகளும் தங்கள் நாட்டவர்கள் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ளன.
இருப்பினும், தற்போது வரை செளதி அரேபியா அரசுத் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
2023 இல் 200 ஹஜ் பயணிகள் உயிரிழந்தவர், அவர்களில் பெரும்பாலானோர் இந்தோனேசியாவை சேர்ந்தவர்கள். 2006 இல் கூட்ட நெரிசலில் சிக்கி 300-க்கும் மேற்பட்டோரும், 2015 இல் 2,200 பயணிகளும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.