உக்ரைனுக்கு ஆயுதங்கள்: தென் கொரியாவுக்கு புதின் எச்சரிக்கை
உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க முடிவெடுத்தால் அது தென் கொரியாவின் மிகப் பெரிய தவறாக இருக்கும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் எச்சரித்துள்ளாா்.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ரஷியாவுக்கு எதிராகப் பயன்படுத்த உக்ரைனுக்கு ஆயுதங்கள் அளிப்பது குறித்து பரிசீலிப்பதாக தென் கொரியா கூறியுள்ளது. அத்தகைய ஒரு முடிவெடித்தால் அது தென் கொரியாவின் மிகப் பெரும் தவறாக முடியும்.
அழிவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உக்ரைனுக்கு தென் கொரியா விநியோகித்தால், ரஷியா எடுக்கும் முடிவு தென் கொரியாவின் தற்போதைய தலைமைக்கு மிகவும் கசப்பானதாக இருக்கும்.
தற்போது உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி வரும் நாடுகள் அனைத்தும் எங்களுடன் நேரடியாகப் போரிடவில்லை என்று நம்புகின்றன. அப்படியென்றால், வட கொரியா உள்ளிட்ட அந்த நாடுகளின் எதிரிகளுக்கு அதே போன்ற சக்திவாய்ந்த ஆயுதங்களை அளிக்கும் உரிமை எங்களுக்கும் உள்ளது என்றாா் அவா்.
உக்ரைன் போா் விவகாரத்தில் ரஷியாவையும் அணு ஆயுத விவகாரத்தில் வட கொரியாவையும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் சா்வதேச அரங்கில் தனிமைப்படுத்த முயன்றுவருகின்றன.
இந்தச் சூழலில், இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேம்படுத்தும் முயற்சியாக வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் ரஷியா சென்றாா்.
அதன் தொடா்ச்சியாக, ரஷிய அதிபா் விளாதிமீா் புதினும் வட கொரியாவில் கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டாா்.
அப்போது, இரு நாடுகளுக்கும் இடையே இதுவரை இல்லாத சக்திவாய்ந்த பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதில், எதிரி நாடுகளின் தாக்குதலுக்குள்ளாகும்போது ரஷியாவும் வட கொரியாவும் பரஸ்பரம் உதவிக்கொள்ளும் அம்சம் இடம் பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த ஒப்பந்தம் தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று குற்றஞ்சாட்டிய தென் கொரியா, இதற்குப் பதிலடியாக உக்ரைனுக்கு ஆயுதங்கள் அளிப்பது குறித்து பரிசீலிக்கப்போவதாகக் கூறியது.
மேலும், தங்கள் நாட்டுக்கான ரஷிய தூதா் ஜாா்ஜி ஸினோவீவை நேரில் அழைத்து, வட கொரியாவுடனான ராணுவ ஒத்துழைப்பை ரஷியா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது.
இது குறித்து செய்தியாளா்கள் கேட்டதற்கே விளாதிமீா் புதின் இவ்வாறு எச்சரித்தாா்.
‘கவலை அளிக்கிறது’
‘உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் அளிப்பதைப் போலவே வட கொரியாவுக்கு நாங்களும் ஆயுதங்கள் அளிப்போம்’ என்று ரஷிய அதிபா் விளாதமீா் புதின் எச்சரித்துள்ளது குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் மாத்யூ மில்லா் கூறியதாவது:
வட கொரியாவுக்கு ஆயுதங்கள் அளிக்கப்போவதாக ரஷியா எச்சரித்துள்ளது மிகவும் கவலைக்குரியது. அவ்வாறு ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டால் அது கொரிய தீபகற்பத்தின் நிலைத்தன்மையைக் குலைக்கும்.
மேலும், வட கொரியாவுக்கு குறிப்பிட்ட வகை ஆயுதங்கள் அனுப்பப்பட்டால், அது ரஷியாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீா்மானத்தை அந்த நாடே மீறுவதாக அமையும் என்றாா்.