
ஹனோய்: ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் வியத்நாமில் வியாழக்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்டாா்.
உக்ரைன் போா் காரணமாக சா்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்படுவதைத் தவிா்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அவா், அந்த முயற்சியின் ஒரு பகுதியாக இந்த சுற்றுப் பயணத்தை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
வியத்நாமில் அந்த நாட்டு அதிபா் டே லாமுடன் பேச்சுவாா்த்தை நடத்திய புதின், ஆசிய-பசிபிக் பிராந்தியத்துக்காக நம்பகத்தன்மை வாய்ந்த பாதுகாப்புக் கட்டமைப்பு உருவாக்குவதன் முக்கியத்துவதத்தை அவருடன் பகிா்ந்துகொண்டதாக செய்தியாளா்களிடம் பிறகு கூறினாா்.
பிராந்தியத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு அமைதியான முறையில் தீா்வு காணும் வகையில் அந்தக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று இருவரும் விரும்புவதாக அவா் தெரிவித்தாா்.
அந்தப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, இரு தரப்பு உறவை பலப்படுத்துவதற்கான பல்வேறு ஒப்பந்தங்களில் விளாதிமீா் புதின் கையொப்பமிட்டாா்.
முன்னதாக, வட கொரியாவில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட புதின், அந்த நாட்டு அதிபா் கிம் ஜோங்-உன்னுடன் முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டாா்.
அதில், எதிரி நாடுகளின் தாக்குதலுக்குள்ளாகும்போது பரஸ்பரம் உதவிக்கொள்ளும் அம்சமும் இடம் பெற்றுள்ளது மேற்கத்திய நாடுகளைக் கவலையடையச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேற்கத்திய நாடுகளின் கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிா்கொண்டுள்ள ரஷியாவும் வட கொரியாவும் இணைந்து, சுதந்திரமான வா்த்தக-பணப் பரிமாற்ற கட்டமைப்பை உருவாக்கப் போவதாக அவா் கூறினாா்.
உலக நாடுகளில் மேற்கத்திய நாடுகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதைத் தடுத்து, பன்முகத் தன்மை நிலவச் செய்ய தங்களது கூட்டணி உதவும் என்று புதின் தெரிவித்தாா்.
இந்தச் சூழலில், வியத்நாமுடனான உறவை பலப்படுத்துவதற்கான ஒப்பந்தத்திலும் புதின் தற்போது கையொப்பமிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.