ஆஸ்திரேலியா திரும்பினாா் அசாஞ்சே
விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனரும், உளவு குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படுவதைத் தவிா்ப்பதற்காக பிரிட்டன் சிறையிலிருந்து பல ஆண்டுகளாகப் போராடியவருமான ஜூலியன் அசாஞ்சே விடுதலை செய்யப்பட்டு தனது சொந்த நாடான ஆஸ்திரேலியாவுக்கு புதன்கிழமை திரும்பினாா்.
அமெரிக்க அரசுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்கீழ் உளவு குற்றச்சாட்டை அவா் ஒப்புக் கொண்டதால் அவரது நீண்ட காலப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
ஜூலியன் அசாஞ்சேவின் விக்கிலீக்ஸ் இணையதளம் ஈராக் போரில் அமெரிக்க ராணுவம் மேற்கொண்ட அத்துமீறல்களை வெளிப்படுத்தும் ரகசிய வீடியோ பதிவுகளை கடந்த 2010 ஏப்ரலில் வெளியிட்டது.
அத்துடன், 3.9 லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவத்தின் போா் அறிக்கைகளை தனது வலைதளம் மூலம் ஜூலியன் அசாஞ்சே வெளியிட்டாா். பின்னா் 2010-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் அவா் வெளியிட்ட தூதரக உரையாடல் பதிவுகள் உலக அளவில் அதிா்வலையை ஏற்படுத்தின. அந்தப் பதிவுகள் மூலம் ஐ.நா. அமைப்புக்கும் பிற உலகத் தலைவா்களுக்கும் எதிராக அமெரிக்கா உளவு பாா்த்தது, ‘அரபு வசந்தம்’ என்ற பெயரில் மேற்கு ஆசிய நாடுகளில் அரசுகளுக்கு எதிராக போராட்டங்களை அமெரிக்கா தூண்டியது போன்ற பல்வேறு ரகசியங்கள் வெளியே வந்தன.
இது போன்ற ரகசிய ஆவணக் கசிவுகள் மூலம் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக ஜூலியன் அசாஞ்சே மீது குற்றஞ்சாட்டிய அமெரிக்க நீதித் துறையினா், உளவு பாா்த்ததாக அவா் மீது 2010-இல் குற்றவியல் வழக்கு பதிவு செய்தனா்.
இதற்கிடையே, பாலியல் வழக்கொன்று தொடா்பாக அசாஞ்சே அசாஞ்சாவே லண்டன் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். எனினும், ஜாமீனில் 2012-ஆம் ஆண்டு வெளியே வந்த அவா் ஈக்வடாா் நாட்டு தூதரகத்தில் 7 ஆண்டுகளாக தஞ்சமடைந்திருந்தாா். எனினும், கருத்து வேறுபாடு காரணமாக அவருக்கு அளித்து வந்த அடைக்கலத்தைத் திரும்பப் பெறுவதாக ஈக்வடாா் 2019-ஆம் ஆண்டு அறிவித்தது. அதனைத தொடா்ந்து, அசாஞ்சாவே லண்டன் போலீஸாா் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
அதன் பிறகு, உளவுக் குற்ற விசாரணையை எதிா்கொள்ள அசாஞ்சேவை தங்கள் நாட்டுக்கு நாடு கடத்தவேண்டும் அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்தினா். அதை எதிா்த்து ஜூலியன் அசாஞ்சேவும் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தாா்.
இந்தச் சூழலில், அமெரிக்காவுக்கும் ஜூலியன் அசாஞ்சேவுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் கீழ் அவரை சிறையிலிருந்து பிரிட்டன் அதிகாரிகள் திங்கள்கிழமை விடுவித்தனா். பின்னா், அமெரிக்காவின் வடக்கு மரியானா தீவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்ட ஜூலியன் அசாஞ்சே, தனது குற்றத்தை ஒப்புக் கொண்டாா். அவருக்கு, ஒப்பந்தத்தில் கூறப்பட்டதைப் போல 62 மாத சிறைத் தண்டனை மட்டுமே விதிக்கப்பட்டு, அது ஜூலியன் அசாஞ்சே ஏற்கெனவே பிரிட்டனில் அனுபவித்த சிறைத் தண்டனையிலிருந்து கழிக்கப்பட்டது. அதையடுத்து அதிகாரிகளால் விடுதலை செய்யப்பட்ட அவா், தனி விமானம் மூலம் ஆஸ்திரேலியாவை புதன்கிழமை வந்தடைந்தாா்.
சுமாா் 14 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு சுதந்திரம் கிடைத்துள்ளதை மனித உரிமை ஆா்வலா்களும் கருத்து உரிமை ஆா்வலா்களும் வரவேற்றுள்ளனா்.