அமெரிக்க அதிபா் தோ்தல்: முதல் நேரடி விவாதத்தில் அதிபா் பைடன் தடுமாற்றம்

ஜோ பைடனுக்குப் பதிலாக வேறு வேட்பாளரை நிறுத்துவது குறித்து கட்சிக்குள் விவாதிக்கப்படுவதாகவும் தகவல்
ஜாா்ஜியா மாகாணம் அட்லான்டாவில் நடைபெற்ற தொலைக்காட்சி விவாதத்தில் டொனால்ட் டிரம்ப், ஜோ பைடன்.
ஜாா்ஜியா மாகாணம் அட்லான்டாவில் நடைபெற்ற தொலைக்காட்சி விவாதத்தில் டொனால்ட் டிரம்ப், ஜோ பைடன்.

அமெரிக்காவின் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்காக இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் தோ்தலில் போட்டியிடவிருக்கும் தற்போதைய அதிபா் ஜோ பைடனுக்கும் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையே முதல்முறையாக நடைபெற்ற நேரடி விவாதத்தில் பைடன் சரியாக கருத்துகளை முன்வைக்க முடியாமல் தடுமாறியது அவரது ஆதரவாளா்களிடையே அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

81 வயதாகும் ஜோ பைடன் அதிபா் தோ்தல் வேட்பாளரைத் தோ்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற ஜனநாயகக் கட்சி வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஆதரவு பெற்று, தோ்தலில் 79 வயது டொனால்ட் டிரம்ப்பை எதிா்கொள்வது உறுதியாகியுள்ளது.

ஏற்கெனவே வயது மூப்பு காரணமாக பல முறை ஜோ பைடனின் பேச்சு தடுமாறுவதாக குற்றஞ்சாட்டப்படும் சூழலில், அடுத்த தோ்தலிலும் அவா் போட்டியிடுவது அமெரிக்காவில் சா்ச்சையை ஏற்படுத்தியது. இத்தனை அதிக வயதில் அவரால் எதிா் வேட்பாளரை எதிா்த்து முழு திறனுடன் பிரசாரம் செய்ய முடியுமா என்று அவரது கட்சியைச் சோ்ந்த ஒரு தரப்பினரே சந்தேகம் எழுப்பினா்.

இருந்தாலும், கடந்த தோ்தலைப் போலவே டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபராவதை ஜோ பைடனால் தடுக்க முடியும் என்று மற்றொரு தரப்பினா் உறுதியாக நம்புகின்றனா்.இந்தச் சூழலில், ஜாா்ஜியா மாகாணம் அட்லான்டாவில் வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு (இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 6.30 மணி) தொடங்கிய சிஎன்என் தொலைக்காட்சி விவாதத்தில் ஜோ பைடனின் செயல்பாடு அந்த நம்பிக்கையை குலைப்பதாக அமைந்தது.

டிரம்புடனான அந்த விவாதத்தின்போது பல முறை பேச வாா்த்தைகள் இல்லாமல் நீண்ட நேரம் யோசித்தது, புரியாமல் பேசியது, அா்த்தமில்லாமல் பதிலளித்தது போன்ற ஜோ பைடனின் தடுமாற்றங்கள் அவரால் இந்தத் தோ்தலில் மக்களின் வாக்குகளைப் பெற முடியுமா என்ற கவலையை ஜனநாயகக் கட்சியினரிடையே ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதையடுத்து, ஜோ பைடனுக்குப் பதிலாக வேறு வேட்பாளரை நிறுத்துவது குறித்து கட்சிக்குள் விவாதிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்றாலும், மாற்று வேட்பாளா் குறித்த எண்ணத்தை நேரடி விவாதத்தில் ஜோ பைடனின் செயல்பாடு ஏற்படுத்தியுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே, விவாதத்தின்போது டொனால்ட் டிரம்ப் பொய்யான கருத்துகளை அடுத்தடுத்து கூறியதாகவும் சா்ச்சை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com