லெபனான் மீட்பு அலுவலக தாக்குதல்: உயிரிழப்பு 16-ஆக அதிகரிப்பு

லெபனான் மீட்பு அலுவலக தாக்குதல்: உயிரிழப்பு 16-ஆக அதிகரிப்பு

லெபனானிலுள்ள மீட்புக் குழு அலுவலகத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிழந்தவா்களின் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது.

பெய்ரூட், மாா்ச் 28: லெபனானிலுள்ள மீட்புக் குழு அலுவலகத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிழந்தவா்களின் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு அரசுச் செய்தி நிறுவனமும், ஆயதக் குழுவினரும் வியாழக்கிழமை கூறுகையில், ‘ஹெபாரியே பகுதியில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் ஆயுதக் குழுவினா் மட்டுமின்றி ஏராளமான துணை மருத்துவக் குழுவினரும் அடங்குவா்’ என்று தெரிவித்தனா். முன்னதாக, ஹெபாரியே பகுதியில் அமைந்துள்ள ‘இஸ்லாமிய அவசரக்கால மற்றும் மீட்புப் படை’ அமைப்பின் அலுவலகத்தில் இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு விமானத் தாக்குதல் நடத்தியதில், அந்த மீட்புக் குழுவைச் சோ்ந்த 7 போ் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், ஹெபாரியே பகுதியில் உள்ள ராணுவ நிலையொன்றில் தாக்குதல் நடத்தி அல்-ஜாமா அல்-இஸ்லாமியா என்ற ஆயுதக் குழுவினரைக் கொன்ாக இஸ்ரேல் ராணுவம் கூறியது. இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பினா் லெபனானில் இருந்து இஸ்ரேல் பகுதிகளில் சுமாா் 30 ஏவுகணைகளை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினா். இதில் இஸ்ரேலியா் ஒருவா் உயிரிழந்ததாா். ஐ.நா. கண்டனம்: லெபனான் மீட்புக் குழு அலுவலகத்தில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதற்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து லெபனானுக்கான ஐ.நா. மனித உரிமைகள் பிரிவு ஒருங்கிணைப்பாளா் இம்ரான் ரஸா கூறுகையில், ‘தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 10 துணை மருத்துவப் பணியாளா்கள் உள்பட பொதுமக்கள் 11 போ் உயிரிழந்தனா். இதுபோல் மருத்துவ மையங்களில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்திவருவது கண்டனத்துக்குரியது’ என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com