
மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியாவில் புதன்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அந்த நாட்டுப் பிரதமர் ராபர்ட் ஃபிக்கோ படுகாயமடைந்து உயிருக்குப் போராடி வருகிறார்.
59 வயதாகும் அவர் ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஸ்லோவாக்கியா தொலைக்காட்சியான "டிஏ3' கூறியதாவது: தலைநகர் ப்ராகுக்கு 150 கி.மீ. தொலைவிலுள்ள ஹாண்ட்லோவா நகரில் தனது ஆதரவாளர்களிடையே பிரதமர் ராபர்ட் ஃபிக்கோ உரையாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரை நோக்கி ஒருவர் 4 முறை துப்பாக்கியால் சுட்டார். இதில் ஃபிக்கோவின் வயிற்றுப் பகுதியில் குண்டுகள் பாய்ந்தன என்று அந்தத் தொலைக்காட்சி தெரிவித்தது.
ராபர்ட் ஃபிக்கோவின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
துப்பாக்கியால் பலமுறை சுடப்பட்ட பிரதமர் ஃபிக்கோ, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
மிகவும் அவசரநிலை என்பதால் பிராட்ஸ்லாவாவுக்குப் பதில் லாண்ட்லோவாவிலிருந்து 29 கி.மீ. தொலைவில் உள்ள பானஸ்க் பிஸ்ட்ரிகா மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் அவர் அழைத்துச் செல்லப்பட்டார் என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராபர்ட் ஃபிக்கோவின் அரசியல் எதிர்ப்பாளரும், தற்போது பதவிக் காலம் முடிவடையவுள்ள அதிபருமான ஸுஸானா கபுடோவா வெளியிட்டுள்ள அறிக்கையில், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில் அவர், "பிரதமர் மீது தாக்குதல் நடத்துவது ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல். எந்தவொரு வன்முறையையும் ஏற்க முடியாது. நாட்டில் பரப்பப்படும் வெறுப்புணர்வே இதுபோன்ற தாக்குதலுக்குக் காரணமாக அமைந்துள்ளது. எனவே, அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார்.
ஸ்லோவாக்கியாவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவரும் ராபர்ட் ஃபிக்கோவின் ஆதரவாளருமான பீட்டர் பெலக்ரினி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஸ்லோவாக்கியாவின் ஜனநாயகம் இதுவரை இல்லாத அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. அரசியல் கருத்துகளை வாக்குச் சீட்டின் மூலம் வெளிப்படுத்தாமல் துப்பாக்கிகள் மூலம் நாம் வெளிப்படுத்த தொடங்கினால் நாட்டின் 31 ஆண்டு கால இறையாண்மை நிலைகுலைந்துவிடும்' என்றார்.
இந்தத் தாக்குதலுக்கான நோக்கம் குறித்து இதுவரை தகவல் இல்லை.
நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடான ஸ்லோவாக்கியாவின் பிரதமரை படுகொலை செய்ய முயற்சி நடைபெற்றுள்ளது ஐரோப்பா முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நேட்டோ பொதுச் செயலர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க் வெளியிட்டுள்ள "எக்ஸ்' பதிவில், "பிரதமர் ராபர்ட் ஃபிக்கோ மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.
27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியனின் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு 3 வாரங்களுக்கு முன்னர் இந்தப் படுகொலை முயற்சி நடைபெற்றுள்ளது.
3 முறை நாட்டின் பிரதமராக பொறுப்பு வகித்துள்ள ராபர்ட் ஃபிக்கோ, அமெரிக்காவுக்கு எதிரான - ரஷியாவுக்கு ஆதரவான கருத்துகளைக் கொண்டவர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவரது இடதுசாரி "திசை' கட்சி அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பனைப் போல் அவரும் ஸ்லோவாக்கியாவை ரஷிய ஆதரவு நாடாக மாற்றுவார் என்று விமர்சகர்கள் அச்சம் தெரிவித்துவந்தனர்.
இந்த நிலையில் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.