ஈரானுக்கு ஐ.நா. எச்சரிக்கை! உள்ளாடை மட்டுமே அணிந்து போராடிய பெண்ணுக்கு பெருகும் ஆதரவு!

ஈரானில் உள்ளாடை மட்டுமே அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்ததற்கு ஐ.நா. எச்சரிக்கை.
ஈரான் பல்கலை.யில் உள்ளாடை மட்டுமே அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண்
ஈரான் பல்கலை.யில் உள்ளாடை மட்டுமே அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண்படம் |எக்ஸ்
Published on
Updated on
2 min read

ஈரானில் உள்ளாடை மட்டுமே அணிந்து அரை நிர்வாணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியை கைது செய்ததற்கு ஐக்கிய நாடுகள் அவை எச்சரித்துள்ளது.

ஐ.நா. சர்வதேச மனித உரிமை அமைப்பின் ஈரானுக்கான பிரதிநிதி மய் சாடோ, கைது செய்யப்பட்ட மாணவியின் விவகாரத்தை கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இஸ்லாமிக் ஆஸாத் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் உள்ளாடை மட்டுமே அணிந்தவாறு வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார். கடந்த 2ஆம் தேதி நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பான விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

ஈரானின் ஆடைக் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அம்மாணவி, உள்ளாடை மட்டுமே அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பல்கலைக் கழக வளாக சாலையில், காரில் வந்த காவல் துறையினர் அப்பெண்ணை வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச்செல்கின்றனர்.

ஐ.நா. கண்காணிப்பு

ஈரானின் ஹிஜாப் கட்டுப்பாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக் கழக வளாகத்தில் போராடிய பெண்ணை கைது செய்து அழைத்துச்சென்ற விடியோவை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஐ.நா. சர்வதேச மனித உரிமை அமைப்பின் ஈரானுக்கான பிரதிநிதி மய் சாடோ,

''அதிகாரிகள் நடந்துகொள்ளும் விதம் உள்பட இந்த விவகாரத்தில் அனைத்தையும் கூர்ந்து கண்காணித்து வருகிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தை கண்காணிப்பதோடு மட்டுமல்லாமல், உரிய விசாரணை நடத்தி அப்பெண்ணுக்கு நீதி கிடைக்கச்செய்ய வேண்டும் என பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஈரானில் பெண்கள் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ளதாகவும், இப்பெண் தனது உடலை ஆயுதமாக்கி அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

சிறையிலிருந்து ஆதரவு

தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நோபல் பரிசு வென்ற ஈரான் மனித உரிமை செயல்பாட்டாளர் நர்கீஸ் முகமதி, சிறையில் இருந்தவாறு இளம்பெண்ணின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சிறையில் இருந்தவாறு அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இப்பெண் தனது போராட்டத்துக்காக உரிய விலை கொடுக்க நேரிடலாம். ஆனால், வற்புறுத்தலுக்கும் ஆதிக்கத்துக்கும் தலைவணங்க வேண்டாம்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் உடல் கிளர்ச்சியின் குறியீடு. எதிர்ப்பு மற்றும் கோபத்தின் வெளிப்பாடு. அடக்குமுறை மற்றும் பெண்களை துன்புறுத்துவதை கைவிட்டு அப்பெண்ணை விடுதலை செய்ய வேண்டும்.

துன்புறுத்தல்கள் மற்றும் தரக்குறைவான நடத்தைகளிலிருந்து அப்பெண்ணை அதிகாரிகள் பாதுகாக்க வேண்டும். குடும்பத்தாரையும், வழக்குரைஞரையும் சந்திக்க அப்பெண்ணுக்கு அனுமதி வழங்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.

உள்ளாடை அணிந்து போராடியது ஏன்?

ஈரானில் பெண்களுக்கு கடும் ஆடைக் கட்டுப்பாடு உள்ளது. இதற்கு எதிராக அம்மாணவி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

பல்கலைக் கழக வளாகத்தில் முறையாக ஹிஜாப் அணியாததால், ஹிஜாப் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மாணவியைத் தாக்கியதாகவும், இதனால் தனது உடலையே ஆயுதமாக மாற்றி, உள்ளாடை மட்டுமே அணிந்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

ஹிஜாப் கட்டுப்பாட்டு அதிகாரிகள் பார்க்கும்போது அம்மாணவி ஹிஜாப் அணியவில்லை என்றும், இதனால், ஹிஜாப் அணிய வற்புறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, அவரின் ஆடைகளை அதிகாரிகள் கிழித்ததாகவும் கூறப்படுகிறது. இதில், அப்பெண் காயமடைந்து ரத்தக் கசிவும் ஏற்பட்டுள்ளது. மேலும், அங்கிருந்த தூணில் அம்மாணவியை அதிகாரிகள் பிடித்து இடித்ததால் ஆத்திரமடைந்த அம்மாணவி, உள்ளாடையுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.