அதிபர் தேர்தல்: அமெரிக்க தலைநகரில் உச்சகட்ட பாதுகாப்பு!

அமெரிக்க அதிபர் தேர்தல் - வாஷிங்டன் டி.சி.யில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
வெள்ளை மாளிகை அருகே தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள காட்சி
வெள்ளை மாளிகை அருகே தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள காட்சிபடம் | AP
Published on
Updated on
2 min read

வாஷிங்டன் டி.சி. மாநகரில் பொது இடங்களில் மக்கள் நடமாட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதால் பெரும்பாலான பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று(நவ. 5) மாலை தொடங்கியுள்ளது. அமெரிக்க நேரப்படி(அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில்), செவ்வாய்க்கிழமை(நவ. 5) அதிகாலை 5 மணி, அதாவது இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு, வெர்மோண்ட் உள்ளிட்ட இடங்களில் வாக்குப்பதிவு ஆரம்பமாகியுள்ளது. அங்கு வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்கு செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தலையொட்டி, அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் டி.சி.யில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகை உள்பட அரசு கட்டடங்களின் முகப்புகளில் தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தலையொட்டி, வாஷிங்டன் நகர வீதிகள் வழக்கத்துக்கு மாறாக வெறிச்சோடி காணப்படுகின்றன. சாலைகளில் வாகனப் போக்குவரத்தும் குறைவாகவே இருப்பதால், போக்குவரத்து நெரிசலும் இல்லை.

தேர்தலையொட்டி நவ. 4, 5 ஆகிய நாள்களில் பெரும்பாலான மதுபானக் கூடங்கள், உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. அங்குள்ள பள்ளிகளிலும் இணையதள வழியில் வகுப்புகள் எடுக்கப்படுவதால் மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டிய அவசியமும் இல்லை.

வெள்ளை மாளிகையையொட்டியுள்ள வீதிகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது
வெள்ளை மாளிகையையொட்டியுள்ள வீதிகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதுபடம் | AP

வெள்ளை மாளிகை அமைந்துள்ள பென்னிசில்வேனியா நிழற்சாலைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதலே பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வீதிகளில் பிளைவுட் கட்டைகளால் தடுப்புகள் அமைத்து அங்கு கடை வைத்திருக்கும் வியாபாரிகள் பாதுகாப்பை உறுதிசெய்துள்ளனர்.

இவையெல்லாம், கடந்த காலங்களில் நிகழ்ந்ததைப் போல வன்முறை உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏற்படாமலிருக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்தான்.

கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி, அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றுவிட்டதாக நாடாளுமன்றத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எதிரணியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்பின் ஆதரவாளர்கள், வலதுசாரி தீவிர செயல்பாட்டாளர்கள் பலர் வெள்ளை மாளிகை அருகே திரண்டதில் வன்முறை மூண்டது.

முன்னதாக, கடந்த 2020-ஆம் ஆண்டு மே, ஜூன் மாதங்களில், கறுப்பின மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் வன்முறை ஏற்பட்டதில் அங்குள்ள பல வணிக நிறுவனங்களும் கடைகளும் சேதப்படுத்தப்பட்டன.

வாஷிங்டனில் ஹோவார்டு பல்கலைக்கழகத்தில்  அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் கலந்துகொள்ளும் சிறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன
வாஷிங்டனில் ஹோவார்டு பல்கலைக்கழகத்தில் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் கலந்துகொள்ளும் சிறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றனபடம் | AP

இந்த நிலையில், முந்தையகால கசப்பான அனுபவங்களைத் தொடர்ந்து, இம்முறை வணிகர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தலுக்கு முன்கூட்டியே செய்துள்ளனர்.

எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாமலிருக்க மாநகர காவல்துறையும் ஏராளமான காவலர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. அந்த வகையில், வாஷிங்டன் டி.சி. மாவட்டத்தில், பொது இடங்களில் காவல் அதிகாரிகள் 12 மணி நேர சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாக காவல் தலைமை அதிகாரி பமேலா ஏ. சுமித் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com