டொனால்ட் டிரம்ப் மகத்தான வெற்றி! 132 ஆண்டு கால சாதனை முறியடிப்பு!

டொனால்ட் டிரம்ப் பெற்றது மகத்தான வெற்றி எனவும் 132 ஆண்டு கால சாதனை முறியடிக்கப்பட்டதாகவும் தகவல்.
டொனால்ட் டிரம்ப்
டொனால்ட் டிரம்ப்Julia Demaree Nikhinson
Published on
Updated on
2 min read

2024ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் டொனால்ட் டிரம்ப், பல புதிய வரலாறுகளை படைத்திருப்பதோடு, 132 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப், 2024ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, பல கட்டங்களைத் தாண்டி இன்று வெற்றி என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

அமெரிக்காவின் மிக முக்கியமான மாகாணங்களில் வெற்றி பெற்றதன் மூலம், பெரும்பான்மை பலத்தை பெற்றதோடு, மகத்தான வெற்றி என்று பெருமையடித்துக் கொள்ளும் அளவுக்கு பல விஷயங்கள் இந்த தேர்தலில் நடந்திருப்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

அமெரிக்க அதிபராக, தொடர்ச்சியாக அல்லாமல், இரண்டாவது முறையாக பதவியேற்றிருக்கும் இரண்டாவது தலைவராக உருவாகியிருக்கிறார் டொனால்ட் டிரம்ப். கடைசியாக இந்த சாதனை படைக்கப்பட்டது 132 ஆண்டுகளுக்கு முன்ப.

க்ரோவர் கிளெவ்லான்ட் அமெரிக்காவின் 22வது மற்றும் 24வது அதிபராக பதவியேற்றார். அதாவது, 1885ஆம் ஆண்டு முதல் 1889 வரையிலும், அடுத்து 1893 முதல் 1897ஆம் ஆண்டு வரையிலும் இரண்டு முறை பதவி வகித்துள்ளார். இதுபோல, டிரம்ப் 2016ஆம் ஆண்டு அதிபராகி, 2020ஆம் ஆண்டு ஜோ பைடனிடம் தோற்று, 2024ஆம் ஆண்டு கமலா ஹாரிஸை வென்று சாதனையை முறியடித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக இருக்கும் அதிக வயதுடையவராக அதிபர் ஜோ பைடன் உள்ளார். அவருக்கு தற்போது 82 வயதாகிறது. ஆனால், அமெரிக்க அதிபர் தேர்தலில், அதிக வயதுடைய நபர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்றால் டொனால்ட் டிரம்ப்தான் அது, அவருக்கு தற்போது 78 வயதாகிறது.

கடந்த இருபது ஆண்டுகளில், மக்களின் அதிக வாக்குகளைப் பெற்ற முதல் குடியரசுக் கட்சி வேட்பாளராகவும் டொனால்ட் டிரம்ப் இருப்பதாக ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இத்தனை பெருமைகளுக்கு இடையே, அமெரிக்க அதிபராக இருந்த காலத்திலேயே இரண்டு முறை குற்றச்சாட்டு நடவடிக்கைகளை எதிர்கொண்டவர் என்ற பட்டத்தையும் அவரே பெருகிறார். ஆனால், இரண்டு வழக்குகளிலும் அவர் விடுவிக்கப்பட்டார்.

2016ஆம் ஆண்டு தேர்தலின்போது உக்ரைன் உதவியை நாடியதாக ஒரு குற்றச்சாட்டும், பிறகு 2021ஆம் ஆண்டு அவரது பதவிக் காலம் நிறைவடையும் போது இரண்டாவது குற்றச்சாட்டையும் எதிர்கொண்டிருந்தார்.

குற்றச்செயலுக்காக தண்டனை பெற்று அதிபராக பதவியில் அமரும் முதல் நபராகவும் டொனால்ட் டிரம்ப் இருப்பார். இந்த ஆண்டு தொடக்கத்தில், குற்றச் செயல் ஒன்றில், குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் நியூ யார்க் நீதிமன்றம் அவருக்கு தீர்ப்பளித்தது. ஆனால், இன்னும் தண்டனை விதிக்கப்படவில்லை. இந்த வழக்கு நவம்பர் 26ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

கடந்த 2016ஆம் தேதி அதிபர் தேர்தலுக்கு முன்னர், திரைப்பட நட்சத்திரம் ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் செல்லும் வகையில் வணிக பதிவுகளை தவறாக இணைத்ததாக டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் தான் குற்றமற்றவர் என்றே டிரம்ப் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com