
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பிற்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற எனது நண்பர் டிரம்ப்பிற்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தியா-அமெரிக்கா இடையிலான உலகளாவிய மற்றும் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த எதிர்நோக்கியுள்ளேன்.
மக்களின் முன்னேற்றம், உலகளாவிய அமைதி, நிலைத்தன்மை உள்ளிட்டவற்றை மேம்படுத்த இரு நாடுகளும் இணைந்து பாடுபடுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர்
மீண்டும் அமெரிக்க அதிபராக வரலாற்று சிறப்பு மிக்க வருகை. இதன்மூலம், இஸ்ரேல் - அமெரிக்கா இடையிலான சக்திவாய்ந்த நட்புக்கு உறுதியான நம்பிக்கை கிடைத்துள்ளது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உக்ரைன் அதிபர்
அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப்பின் வெற்றியின் மூலம், வலுவான அமெரிக்காவை எதிர்நோக்குகிறோம் என உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உலக அளவில் வலிமையின் மூலம் அமைதியான அணுகுமுறையை கையாளும் டிரம்ப்பின் முயற்சி பாராட்டத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ் அதிபர்
அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு வாழ்த்துகள். அமைதி மற்றும் வளத்திற்காக முன்பு நான்கு ஆண்டுகள் இணைந்ததைப் போன்று, மீண்டும் இணைந்து பணியாற்றத் தயாராகவுள்ளோம் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் பிரதமர்
வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ள அதிபர் டிரம்ப்பிற்கு மனமார்ந்த வாழ்த்துகள். அடுத்தடுத்த ஆண்டுகளில் உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன் பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மெர் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய பிரதமர்
அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு வாழ்த்துகள். அமெரிக்கர்களும் ஆஸ்திரேலியர்களும் உண்மையான நண்பர்கள். வலுவான எதிர்காலத்துக்கு இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவோம் என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இத்தாலி பிரதமர்
நட்பு, அசைக்க முடியாத கூட்டணியால் இத்தாலி - அமெரிக்கா ஆகிய இரண்டும் சகோதரி நாடுகள் என பிரதமர் ஜார்ஜியா மெலோனி சுட்டிக்காட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.