இந்தியர்களுக்கு கசப்பான செய்தி: குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை கிடைப்பதில் சிக்கல்!

அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
டொனால்ட் டிரம்ப்
டொனால்ட் டிரம்ப்
Published on
Updated on
1 min read

அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் டொனால்ட் டிரம்பின் முக்கிய கொள்கைகளில் முதன்மையானதாக இருப்பது, அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு தன்னிச்சையாக குடியுரிமை கிடைக்கும் திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதே.

இந்த முடிவுக்கான நிர்வாக உத்தரவில், அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கும் முதல் நாளிலேயே கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தகவல், அதிகாரப்பூர்வ டிரம்ப்-வான்ஸ் பிரச்சார தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்க நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு, தன்னிச்சையாகவே அமெரிக்க குடியுரிமை வழங்குவது மட்டும் முடிவுக்கு வந்துவிடவில்லை, மேலும், இந்த திட்டத்துக்கு மிக ஆழமான விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு தன்னிச்சையாகவே குடியுரிமை வழங்குவதை தடை செய்யும் சட்ட மசோதாவில், ஒரு குழந்தை அமெரிக்காவில் பிறந்து, அக்குழந்தைக்கு குடியுரிமை வழங்குவதாக இருந்தால், ஒன்று, அந்தக் குழந்தையின் பெற்றோரின் யாரேனும் ஒருவர் அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டும் அல்லது ஒருவர் அமெரிக்காவில் சட்ட அனுமதியுடன் நுழைந்து, நிரந்தரமாகத் தங்கியிருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படும்.

ஆனாலும், புதிய அதிபராகவிருக்கும் டொனால்ட் டிரம்ப் கொண்டு வரவிருக்கும் இந்த விதிமுறை, அமெரிக்காவின் 14வது சட்டத்திருத்தத்துக்கு எதிரானதாக இருக்கும். ஏற்கனவே இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், அதனை மீறும் வகையில், இந்த அறிவிப்பு இருக்கும் என்றும், அந்நாட்டு சட்ட நிபுணர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

அமெரிக்க அதிபராகத் தேர்வாகியிருக்கும் டொனால்ட் டிரம்ப் அதிபராகப் பதவியேற்றதும், இந்த விதிமுறையை நடைமுறைப்படுத்தினால், அமெரிக்க குடியுரிமை கோரி விண்ணப்பித்திருக்கும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

அமெரிக்க குடியுரிமை பெற்றதற்கான அங்கீகாரத்தைக் குறிக்கும் கிரீன் கார்டு பெற அமெரிக்காவில் எச்-1பி (H-1B) விசாவில் பணிபுரியும் ஏராளமான இந்தியர்கள், பல தசாப்தங்களாக விண்ணப்பித்துக் காத்திருக்கிறார்கள். ஆனால், இவர்களது கனவு நிறைவேறாமலேயே போக வாய்ப்பிருப்பதாகவே கருதப்படுகிறது.

அமெரிக்க அதிபராக குடியரசுக் கட்சியை சோ்ந்த டொனால்ட் டிரம்ப் மீண்டும் தோ்வாகியுள்ளாா். அந்நாட்டின் 47-ஆவது அதிபராக அவா் தோ்வாகியுள்ள நிலையில், துணை அதிபராக ஜே.டி.வேன்ஸ் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com