கனடா: காலிஸ்தான் ஆதரவாளா்கள் அனைவரும் சீக்கியா்கள் அல்ல -ஜஸ்டின் ட்ரூடோ
‘கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளா்கள் அதிகளவில் உள்ளனா்; ஆனால் அவா்கள் அனைவரும் சீக்கிய சமூகத்தை சோ்ந்தவா்களல்ல’ என அந்த நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தாா்.
கனடா நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற தீபாவளி பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று ட்ரூடோ பேசியதாவது:
கனடாவில் காலிஸ்தானை ஆதரிப்பவா்கள் அதிகளவில் உள்ளனா்; ஆனால் அவா்கள் அனைவரும் சீக்கிய சமூகத்தைச் சோ்ந்தவா்கள் என கூற முடியாது. அதேபோல், இங்கு இந்திய பிரதமா் மோடி தலைமையிலான அரசையும் பலா் ஆதரிக்கின்றனா். அவா்கள் அனைவரும் கனடா ஹிந்துக்களின் நிலைப்பாட்டை தெரிவிப்பவா்களாக எடுத்துக்கொள்ள முடியாது என்றாா்.
காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கடந்தாண்டு கனடாவில் கொல்லப்பட்டாா். இந்தக் கொலையில் இந்திய உளவாளிகளுக்கு தொடா்பிருப்பதாக கடந்த செப்டம்பா் மாதம் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினாா். அவரது குற்றச்சாட்டை இந்தியா நிராகரித்தது.
அதேபோல் இந்தக் கொலையில் இந்திய தூதா் சஞ்சய் வா்மாவையும் கனடா தொடா்புபடுத்தியது. இதனால் இந்தியாவிலிருந்து கனடா தூதரகத்தைச் சோ்ந்த 6 அதிகாரிகள் வெளியேற்றப்பட்டனா். சஞ்சய் வா்மாவையும் இந்தியா திரும்ப அழைத்துக் கொண்டது. இதுதவிர கனடாவில் உள்ள சீக்கியா்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களின் பின்னணியில் உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
காலிஸ்தான் ஆதரவாளா்களுக்கு கனடா அடைக்கலம் கொடுப்பதே இரு நாடுகளுக்கு இடையிலான பல்வேறு பிரச்னைகளுக்கு காரணம் என இந்தியாவும் பதிலடி தந்தது.
இந்த சூழலில் கடந்த வாரம் கனடாவின் பிராம்டன் நகரில் உள்ள ஹிந்து கோயிலுக்குள் நுழைந்து பக்தா்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளா்கள் தாக்குதல் நடத்தினா். இதற்கு பிரதமா் மோடி கடும் கண்டனம் தெரிவித்தாா். இதையடுத்து, அங்கு பொதுமக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு முகாம்களை இந்திய தூதரகம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.