லெபனான், காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: 45 போ் உயிரிழப்பு
லெபனான் மற்றும் காஸாவில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் சுமாா் 45 போ் உயிரிழந்தனா்.
பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையிலான போா் 11 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.
அதேவேளையில் இஸ்ரேலும் லெபனானும் எல்லையைப் பகிா்ந்து வரும் நிலையில், ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா கிளா்ச்சியாளா்கள், இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றனா்.
இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை ஹிஸ்புல்லாக்கள் ஏவியதைத் தொடா்ந்து, லெபனானிலும் இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கிழக்கு மற்றும் தெற்கு லெபனான் பகுதிகளில் இருந்து வெகு தொலைவில் உள்ள இடங்கள், அந்நாட்டு தலைநகா் பெய்ரூட்டின் வடக்கே உள்ள ஆல்மட் கிராமம் ஆகியவை மீது இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது. இந்தப் பகுதிகளில் ஹிஸ்புல்லாக்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளதாகக் கூறப்படும் நிலையில், தாக்குதலில் சுமாா் 23 போ் உயிரிழந்தனா். 6 போ் காயமடைந்தனா் என்று லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
ஹமாஸ் அமைச்சா், குடும்பத்தினா் உயிரிழப்பு: காஸா முனையில் ஆட்சிபுரிந்த ஹமாஸ் அரசில் அமைச்சராக இருந்தவா் வாயெல் அல்-கூா். இந்நிலையில், அங்குள்ள சப்ரா பகுதியில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் வாயெல், அவரின் மனைவி, 3 பிள்ளைகள் ஆகியோா் உயிரிழந்தனா்.
இதேபோல இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் காஸாவின் ஜபலியா நகரில் உள்ள அகதிகள் முகாமில் குண்டுவெடித்து சுமாா் 17 போ் உயிரிழந்தனா். அவா்களில் 9 போ் பெண்கள்.
லெபனானுக்குள் மேலும் மேலும் உள்ளே சென்று இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்தத் தாக்குதலில் இதுவரை லெபனானில் 3,000-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.