
மத்திய ஆப்பிரிக்க நாடான சாட் பகுதியில் ராணுவ வீரர்களுக்கும் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 17 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
எனினும், போகோ ஹராம் அமைப்பைச் சேர்ந்த 96 பேரை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இருதரப்பினருக்கு இடையிலான மோதலில் 32 பேர் படுகாயமடைந்ததாக சாட் ராணுவ செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.
மேற்கு ஆப்பிரிக்க பிராந்தியத்தில் தீவிர மதவாதச் சட்டங்களை அமல்படுத்த வலியுறுத்தி போகோ ஹராம் அமைப்பு கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது.
இதன் ஒருபகுதியாக மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சாட் எல்லைப் பகுதிகளில் நுழைந்து போகோ ஹராம் அமைப்பினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இது தொடர்பாக பேசிய ராணுவ செய்தித் தொடர்பாளர் இசாக் அச்செய்க், கடந்த சனிக்கிழமை (நவ. 9) நடைபெற்ற இச்சம்பவத்திற்கு சாட் ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர். இதில் போகோ ஹராம் அமைப்பைச் சேர்ந்த 96 பேர் கொல்லப்பட்டனர்.
தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆபரேஷன் அஸ்கனைட் என்ற போக்கோ ஹராம் அமைப்புக்கு எதிரான நடவடிக்கை மூலம் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.
தொடரும் தாக்குதல்
சாட் எல்லையில் உள்ள ஏரிக்கரையோரம் போகோ ஹராம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் தொடர்ச்சியாக இப்பகுதிகளில் போகோ ஹராம் அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த பயங்கரவாத குழுவையும் அவர்களின் தளங்களையும் முற்றிலும் அழித்து அமைதியை நிலைநாட்டும் வகையில் 2020ஆம் ஆண்டு சாடியன் ராணுவத்தால் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் பிறகு சிறிது இடைவேளைக்குப் பிறகு மீண்டும் போகோ ஹராம் அமைப்பு, மக்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
கடந்த மாதம் ராணுவ முகாம் மீது நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். அதற்கு முன்பு மார்ச் மாதம் 7 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
மேற்கத்திய கல்விக்கு எதிராக கிளர்ச்சியைத் தொடங்கிய போகோ ஹராம் அமைப்பினர், நைஜீரியாவின் வடகிழக்கில் இஸ்லாமிய சட்டத்தை நிறுவ முயற்சித்து வருகிறது.
அவர்களின் இந்தக் கிளர்ச்சியானது கேமரூன், நைஜர் மற்றும் சாட் உள்ளிட்ட மேற்கு ஆப்பிரிக்க அண்டை நாடுகளுக்கும் பரவியது. இதனால் அப்பகுதிகளில் அவ்வபோது போகோ ஹராம் அமைப்பினர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.