
வெளிநாட்டு மாணவர்கள் மிக விரைவாக கனடா பல்கலைக்கழகங்களில் சேர்க்கைக்கான, மாணவர் விசா பெற கடந்த 2018ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மாணவர் நேரடி சேர்க்கை முறையை உடனடியாக ரத்து செய்திருக்கிறது கனடா அரசு.
மாணவர் நேரடி சேர்க்கை முறை எனப்படும் எஸ்டிஎஸ் திட்டத்தை உடனடியாக ரத்து செய்வதாக கனடா அரசு மிகப்பெரிய கொள்கை முடிவை எடுத்து அறிவித்துள்ளது. நவ. 8ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் உத்தரவு மூலம் அந்நாட்டில் படித்து வரும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக, இந்தியாவிலிருந்து சென்றிருக்கும் 90 சதவீத மாணவர்களுக்கு அதிலும் பஞ்சாப் மாநிலத்திலிருந்து சென்ற மாணவர்களுக்கு இது மிகப்பெரிய எதிர்வினையாக மாறியிருக்கிறது.
பஞ்சாப் மாநிலத்திலிருந்துதான, இந்த நேரடி சேர்க்கை முறை மூலம் ஏராளமான மாணவர்கள் கனடா சென்றிருக்கிறார்கள். அவர்களது எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியிருக்கிறது.
குடியேற்றம், அகதிகள், குடியுரிமை கனடா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அனைத்து வெளிநாட்டு மாணவர்களுக்கும் சம உரிமை வழங்கும் வகையில், அவர்களது மாணவர் விசா வழங்கும் நடைமுறையை எளிதாக்க மாணவர் நேரடி சேர்க்கை திட்டம் 2018ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் முதுகலை - இளநிலை மாணவர் சேர்க்கை மற்றும் விசா நடைமுறைகள் விரைவுபடுத்தப்பட்டன. உண்மையில் மாணவர் நேரடி சேர்க்கை, ஆண்டிகுவா, பர்புடா, பிரேசில், சீனா, கொலம்பியா, கோஸ்டாரிகா, இந்தியா, மொராக்கோ, பாகிஸ்தான், பெரு, பிலிப்பின்ஸ், செனகல், செயின்ட் வின்சென்ட், கிரொனடைன்ஸ், டிரினிடட், டொபாகோ, வியட்நாம் நாட்டு மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. நைஜீரிய மாணவர்களுக்கு என்எஸ்இ முறை கொண்டு வரப்பட்டது. இந்த முயற்சிகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படுவதாக நவ.8ஆம் தேதி அறிவித்திருந்தது.
மேலும் அதில், கனடாவில் படிக்க விரும்பும் மாணவர்கள் வழக்கமான மாணவர் விசா முறையில் விண்ணப்பிக்கலாம், நிதி ஆதாரத்தை உறுதி செய்யும் உறுதிசெய்யப்பட்ட மூலதன சான்று மூலம் விசா வழங்குவது பரிசீலிக்கப்படும். உலகம் முழுவதுமிருக்கும் மாணவர்களை கனடா தொடர்ந்து வரவேற்கிறது. அதேவேளையில், அந்த அறிவிப்பு வருவதற்கு முன்பு, மாணவர் நேரடி சேர்க்கை மற்றும் என்ஸ்இ மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு அதே நடைமுறையில் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு விசா வழங்கப்படும். அதன்பிறகு பெறப்பட்ட விண்ணப்பங்கள் வழக்கமான மாணவர் விசா முறையில்தான் பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதால், தகுதியான மாணவர்களுக்கு விசா கிடைப்பதில் பெரிய பாதிப்பு இல்லாவிட்டாலும், கனடாவில் படிப்பதற்கான உரிமம் பெறத் தேவையான அனைத்து தகுதிகளையும் பெற்றிருக்க வேண்டும்.
இது குறித்து குடியேற்றம் தொடர்பான வழக்குகளை கவனித்து வரும் வழக்குரைஞர் ஷாம்ஷெர் சிங் சாந்து எக்ஸ்பிரஸ் குழுமத்துக்கு அளித்த நேர்காணலில், மாணவர் நேரடி நேர்க்கை முறையை கனடா ரத்து செய்திருப்பதால், அது இந்திய மாணவர்களை கடுமையாக பாதிக்கும். குறிப்பாக பஞ்சாப் மாநிலத்திலிருந்து, 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு கனடா சென்றிருக்கும் மாணவர்களை வெகுவாக பாதிக்கும். ஆனால், பட்டப்படிப்பு முடித்துவிட்டு உயர்கல்வியோ அல்லது பிஎச்டியோ படிக்கச் சென்ற மாணவர்களுக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்கிறார்.
கடந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 3 லட்சம் மாணவர்கள் இந்த மாணவர் நேரடி சேர்க்கை திட்டம் மூலம் கனடா சென்றிருக்கிறார்கள். இந்த திட்டத்தின் மூலம் 12 மட்டும் முடித்துவிட்டு ஏற்கனவே கனடா சென்றிருப்பவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருப்பதோடு, அவர்களுக்கு கனடாவில் நிரந்தர குரியுரிமை கிடைக்கும் என்பது கிட்டத்தட்ட இயலாததாகிவிட்டதோடு, படித்து முடித்ததுமே அவர்கள் உடனடியாக இந்தியாவுக்குத் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், சாந்து இது பற்றி கூறுகையில், கனடா எல்லைப் பாதுகாப்பு அமைப்பினர், பணியாற்றும் இடங்கள், பொதுவிடங்களில் வெளிநாட்டு மாணவர்களிடம் சோதனை நடத்தி, அவர்கள் மாணவர் விசா அல்லது பயணிகள் விசா பெற்று தங்கியிருக்கிறார்களா? என்று உறுதி செய்து வருவதாகவும், ஒருவேளை விசா முடிந்து தங்கியிருந்தால் உடனடியாக அவர்கள் நாட்டுக்கு திரும்பி அனுப்பும் பணியும் தொடங்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.