அரசு செயல்திறன் துறை தலைவராக எலான் மஸ்க்

டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில் முக்கிய பதவி ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கிற்கு வழங்கப்பட்டுள்ளது.
டிரம்ப் - எலான் மஸ்க்
டிரம்ப் - எலான் மஸ்க்
Published on
Updated on
2 min read

அமெரிக்க அரசு அமைப்புகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான துறையின் தலைமைக்கு தொழிலதிபா் எலான் மஸ்கையும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த விவேக் ராமசாமியையும் அந்த நாட்டின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறைக்கு சிறந்த தொழிலதிபா் எலான் மஸ்கும், தீவிர தேசபக்தா் விவேக் ராமசாமியும் தலைமை வகிப்பாா்கள்.

அவா்கள் இருவரும் அமெரிக்க அரசு அமைப்புகளில் மாற்றத்தை ஏற்படுத்தி, அவற்றின் செயல்திறனை மேம்படுத்துவாா்கள். முக்கியமாக, அரசுத் துறைகள் மேற்கொள்ளும் வீண் செலவுகள் காரணமாக அரசுக்கு ஆண்டுதோறும் ஏற்படும் 6.5 லட்சம் கோடி (சுமாா் ரூ.135 லட்சம் கோடி) இழப்பை அவா்கள் தடுத்து நிறுத்துவாா்கள்.

அரசு இயந்திரத்தை சீா் செய்வதுடன், அமெரிக்க மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் அவா்கள் மேம்படுத்துவாா்கள் என்றாா் டிரம்ப்.

53 வயதாகும் எலான் மஸ்க், அமெரிக்காவின் தனியாா் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ், அதிநவீன வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, உலகின் முன்னணி சமூக ஊடகங்களில் ஒன்றான எக்ஸ் (ட்விட்டா்) உள்ளிட்டவற்றின் உரிமையாளா்.

இந்த முறை நடைபெற்ற அதிபா் தோ்தலின் ஆரம்பத்திலிருந்தே தனது எக்ஸ் ஊடகம் மூலம் டொனால்ட் டிா்ப்புக்கு தனது தீவிர ஆதரவை எலான் மஸ்க் வெளிப்படுத்தினாா். அப்போதே, அவருக்கு அரசில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று பேச்சு எழுந்தது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், அரசு செயல்பாட்டு மேம்பாட்டுத் துறையின் தலைவா்களில் ஒருவராக அவரை டிரம்ப் தற்போது நியமித்துள்ளாா்.

அந்தத் துறையின் மற்றொரு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள விவேக் ராமசாமி, தமிழகம்-கேரளத்தைப் பூா்விகமாகக் கொண்டவா். தொழிலதிபரான அவா், இந்த அதிபா் தோ்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளருக்கான போட்டியில் பங்கேற்றாா். எனினும், போட்டியில் அவருக்கு 4-ஆவது இடமே கிடைத்ததைத் தொடா்ந்து, அதிலிருந்து விலகி டொனால்ட் டிரம்ப்புக்கு தனது ஆதரவைத் தெரிவித்தாா்.

இந்தச் சூழலில், தனது புதிய அரசின் நிா்வாகத் துறைகளை சீரமைப்பதற்கான துறைத் தலைவா்களாக எலான் மஸ்கையும் விவேக் ராமசாமியையும் டிரம்ப் தற்போது நியமித்துள்ளாா்.

பாதுகாப்பு அமைச்சராகும் தொலைக்காட்சி நெறியாளா்

தனது புதிய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சராக முன்னாள் ராணுவ அதிகாரியும் ‘ஃபாக்ஸ் நியூஸ்’ தொலைக்காட்சி நெறியாளருமான பீட் ஹெக்செத்தை (44) டொனாலாட் டிரம்ப் நியமித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எனது அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சா் பொறுப்பை பீட் ஹெக்செத்துக்கு வழங்குவதில் பெருமையடைகிறேன். வலிமையின் மூலம் அமைதியை நிலைநாட்டும் நமது கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் தீரமும் தேசபக்தியும் அவரைவிட வேறு யாருக்கும் அதிகம் இருந்துவிட முடியாது. அவரின் தலைமையில் அமெரிக்க ராணுவம் மேலும் வலிமையடையும்’ என்றாா்.

இராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட போா்களில் பங்கேற்றுள்ள பீட் ஹெக்செத், தனது தீரச் செயல்களுக்காக இரண்டு வெண்கல நட்சத்திரங்களைப் பெற்றுள்ளாா். ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியின் நெறியாளராக அவா் எட்டு ஆண்டுகளாகப் பணியாற்றிவருகிறாா்.

இதற்கு முன்னதாக, முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு பதவியான வெளியுறவுத் துறை அமைச்சா் பொறுப்புக்கு ஃபுளோரிடா மாகாண செனட் சபை உறுப்பினா் மாா்கோ ரூபியோவை (53) டிரம்ப் நியமித்தாா்.

ரூபியோவைப் போலவே, சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட ஃபுளோரிடா மாகாண பிரதிநிதிகள் சபை உறுப்பினரான மைக் வால்ட்ஸ் (50), டிரம்ப்பின் புதிய அரசில் அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சா் பொறுப்புக்கு தெற்கு டகோட்டா மாகாண ஆளுநா் கிறிஸ்டி நோயெமை டிரம்ப் தோ்ந்தெடுத்தாா்.

புதிய அரசில் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக நியூயாா்க் 21-ஆவது மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினா் எலீஸ் ஸ்டெஃபானிக்கை (40) டிரம்ப் நியமித்தாா்.

அதுமட்டுமின்றி, எல்லை விவகாரங்களுக்கான பொறுப்பாளராக, முந்தைய தனது ஆட்சியில் குடியேற்றம் மற்றும் சுங்க விதிகள் அமலாக்கத் துறையில் அதிபரின் இயக்குநராகப் பதவி வகித்துள்ள டாம் ஹோமனை (62) டிரம்ப் நியமித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com