
தென்னாப்பிரிக்காவில் சட்டவிரோதமாக சுரங்கத்திற்குள் தோண்டுபவர்களை சுரங்கத்திற்குள் வைத்தே காவல்துறையினர் சுரங்கத்தின் வாயிலை மூடியுள்ளனர்.
தென்னாப்பிரிக்காவில் பழைய தங்கச் சுரங்கப் பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கம் தோண்டப்பட்டு வருகிறது. வடமேற்கில் ஸ்டில்பான்டைனில் உள்ள சுரங்கத்திற்குள் சுமார் 4,000 பேர் சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்றனர்.
இவர்களைத் தடுக்க, அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் எவ்வித பலனும் அளிக்கவில்லை. இந்த நிலையில், சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் இருக்கும் சுரங்கத்தின் வாயிலை அந்நாட்டு காவல்துறையினர் மூடிவிட்டனர். இதன்மூலம், உள்ளிருப்பவர்கள் உணவு, தண்ணீருக்காக வெளியில் வந்துதான் ஆகவேண்டும்.
அவர்கள் வெளியே வருகையில், அவர்களை கைது செய்வதற்காக, சுரங்கத்தைச் சுற்றி பல்வேறு போலீஸ் குழுக்கள் காவலில் நிறுத்தப்பட்டுள்ளன.
சில தினங்களுக்கு முன்னர், இதேபோன்ற நடவடிக்கையால்தான், சுரங்கத்திலிருந்து வெளிவந்த சட்டவிரோதத் தொழிலாளர்கள் 1000 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் உணவு, தண்ணீர் இல்லாமல் சுரங்கத்திற்குள் இருந்ததால், அவர்களில் பலரும் நோய்வாய்ப்பட்டே வெளிவந்தனர்.
மேலும், உள்ளிருக்கும் சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் பலரும் பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை முதலான வழக்குகளில் ஈடுபட்டிருப்பதாகக் கூறுகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் அண்டை நாட்டைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர்.
இருப்பினும், அந்நாட்டு அரசின் இந்த செயலுக்கு பலரும் கண்டிப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக அந்நாட்டு மத்திய அமைச்சரான கும்புட்ஸோ கூறியதாவது, ``சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்களை நாங்கள் உள்ளே அனுப்பவில்லை. அவர்கள் வெளிவந்ததும் கைது செய்யப்படுவர். அவர்களுக்கு அரசு எந்த உதவியையும் வழங்காது’’ என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.