
நியூயார்க்கில் ஐ.நா.வுக்கான ஈரான் தூதரை ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ரகசியமாக சந்தித்து அமெரிக்கா- ஈரான் இடையிலான பதற்றத்தை தணிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எலான் மஸ்க் மற்றும் ஈரான் தூதர் அமீர் சயீத் இரவானி ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு நியூயார்க்கில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் நடைபெற்றதாகவும், இருவரும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரானிய அதிகாரிகள், அவர்கள் இருவரும் இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தைக் குறைப்பதில் கவனம் செலுத்தியது பற்றி விவாதித்ததாக தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டிரம்புடன் நடந்த தொலைபேசி வாயிலான உரையாடலின் போது டெஸ்லா மற்றும் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான மஸ்க்கும் உடன் இருந்ததாக தகவல்கள் வெளியாகின. அதன்பின்னர், டொனால்ட் டிரம்ப் அரசின் செயல்திறன் நிறுவனத்தின் இணை இயக்குநராக எலான் மஸ்க்கை நியமித்தார்.
ரஷியா - உக்ரைன் இடையிலான போரில் உக்ரைனுக்கு தகவல் தொடர்பு வழங்குவதில் எலான் மஸ்க் முக்கிய பங்கு வகிக்கிறார்.
டொனால்ட் டிரம்ப் தனது முதல் ஆட்சிக் காலத்தின் போது 2015 ஆம் ஆண்டில் ஈரானுக்கு உலகில் உள்ள மற்ற வல்லரசு நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றினார். மேலும், ஈரானுக்கான எண்ணெய் வருவாய் மற்றும் சர்வதேச பணப்பரிவர்த்தனைக்கான தடைகளையும் விதித்தார்.
தேர்தலுக்கு முன்னதாக, டிரம்ப் மீது கொலை முயற்சிக்கான சதித் திட்டத்தில் ஈரானுக்கு தொடர்பு இருப்பதாக ஃபெடரல் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், ஈரானிய அதிபர் மசூத் பெஷேஸ்கியான் ஈரான் தலைநகர் தெஹ்ரான் வந்திருந்த சர்வதேச அணுசக்தி முகமை இயக்குநர் ரஃபேல் க்ரோஸியை சந்தித்து, அமைதியான அணுசக்தி தொடர்பான எந்தத் திட்டங்களுக்கும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து ஒத்துழைக்க தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளது.
அணுசக்தி திட்ட ஒப்பந்தத்தில் ஈரான் அனைத்து உறுதிமொழிகளையும் பூர்த்தி செய்ததாகவும், ஆனால், அமெரிக்கா அதிலிருந்து ஒருதலைப்பட்சமாக அதிலிருந்து விலகியதாக சர்வதேச அணுசக்தி முகமை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐ.நா.வுக்கான ஈரான் தூதர் அமீர் சயீத் இரவானி, எலான் மஸ்கிடம் விதிக்கப்பட்ட தடைகளுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்றும், அமெரிக்காவில் உள்ள வணிக நிறுவனங்கள் ஈரானில் வந்து வணிகத்தில் ஈடுபடவேண்டும் என்று கேட்டுகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.