லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இன்று (நவ. 19) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 10 பேர் பலியாகினர். 25க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
மத்திய பெய்ரூட்டின் ஸோகாக் எல் பிளாட் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில், படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு ரத்தம் தேவைப்படுவதால், பொதுமக்களிடம் கோரிக்கை வைத்துள்ளதாக ஸின்ஹுவா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பெய்ரூட் நகரின் மீது கடந்த இரு வாரங்களாக தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், மத்திய பெய்ரூட் மீது கடந்த இரு நாள்களாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஸ் அல் நபா பகுதியிலுள்ள வணிக வளாகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவின் தலைமை செய்தித் தொடர்பாளர் முஹம்மது அஃபீப் உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை நடத்தப்பட்ட மற்றோரு தாக்குதலில், ஹிஸ்புல்லாவின் தெற்கு படைகளுக்கு தலைமைத்தாங்கிய மஹ்முத் மடி கொல்லப்பட்டார்.
கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி முதல் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா நிலைக்குழுக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | வால்மார்ட் ஓவனில் இந்தியப் பெண் சடலம்: கொலை இல்லை என்கிறது கனடா காவல்துறை!