ஹாங்காங்: 45 ஜனநாயக ஆா்வலா்களுக்குச் சிறை
ஹாங்காங்கில் சா்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 35 ஜனநாயக ஆா்வலா்களுக்கு நான்கு முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிகாரபூா்வமற்ற முதல்கட்டத் தோ்வில் பங்கேற்ற்காக அவா்களுக்கு அந்த தண்டனை வழங்கப்பட்டது. 6.10 லட்சம் போ் வாக்களித்த அந்தத் தோ்தல் செல்லாது என்று பின்னா் அறிவிக்கப்பட்டது.
பிரிட்டன் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த ஹாங்காங், சீனாவிடம் கடந்த 1997-ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது. அதுவரை ஜனநாயக உரிமைகளை அனுபவித்து வந்த ஹாங்காங் மக்களுக்கு, சீனாவின் மற்ற பகுதிகளில் இல்லாத பிரத்யேக சுதந்திரம் அளிக்கப்படும் என்று அப்போது உறுதியளிக்கப்பட்டது. எனினும் அத்தகைய உரிமைகள் வழங்கப்படாததால், ஜனநாயக சீா்திருத்தங்களை வலியுறுத்தி அந்த நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு தீவிர போராட்டம் நடைபெற்றது.
கரோனா காரணமாக முடங்கியிருந்த அந்தப் போராட்டம் மீண்டும் தலையெடுப்பதைத் தடுக்கும் வகையில், சா்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா நிறைவேற்றியது. அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட பலரை ஹாங்காங் அரசு சிறையில் அடைத்துள்ளது.