உக்ரைன் போர்: "கால் கண்ணிவெடிகளைப் பயன்படுத்த அமெரிக்கா அனுமதிக்கும்'

ரஷியாவுடனான போரில் கால் கண்ணிவெடிகளைப் பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
போா் விமானத்தில் பொருத்தப்பட்ட ஸ்டாா்ம் ஷேடோ ஏவுகணை.
போா் விமானத்தில் பொருத்தப்பட்ட ஸ்டாா்ம் ஷேடோ ஏவுகணை.
Updated on

ரஷியாவுடனான போரில் கால் கண்ணிவெடிகளைப் பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

ஏற்கெனவே, அமெரிக்காவின் பீரங்கி எதிர்ப்பு கண்ணிவெடிகளைப் பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி உள்ளது. இருந்தாலும், பொதுமக்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று தன்னார்வலர்களால் விமர்சிக்கப்படும் கால் கண்ணிவெடிகளைப் பயன்படுத்துவதற்கு உக்ரைனை அனுமதிக்க அமெரிக்கா இப்போதுதான் முடிவு செய்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் கூறியதாவது:

உக்ரைனில் ரஷிய தரைப்படையினருக்கு எதிராகப் பயன்படுத்துவதற்கு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கால் கண்ணிவெடிகளைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும்.

உக்ரைனை ஆக்கிரமிப்பதற்காக பீரங்கிப் படை மூலம்தான் ரஷிய ராணுவம் இதுவரை முன்னேறிவந்தது. ஆனால், தற்போது அத்தகைய நடவடிக்கைகளில் தரைப்படை வீரர்களை முன்னிலைப்படுத்த ரஷியா தொடங்கியுள்ளது.

எனவே, மாறி வரும் ரஷிய போர் உத்திக்கு ஈடுகொடுக்கும் வகையில், பீரங்கி எதிர்ப்பு கண்ணி வெடிகள் மட்டுமின்றி கால்கண்ணிவெடிகளையும் உக்ரைன் பயன்படுத்த தற்போது அனுமதி வழங்கப்படுகிறது என்றார் அவர்.

முன்னதாக, உக்ரைனில் உள்ள ரஷிய ஆக்கிரமிப்புப் பகுதிகளில் மட்டுமே உள்ள ரஷிய நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக அந்த நாட்டுக்கு தாங்கள் வழங்கிய "அட்டாக்கம்ஸ்' ஏவுகணைகளை எல்லை தாண்டி ரஷிய பகுதிகளிலும் வீச உக்ரைனுக்கு அதிபர் பைடன் அனுமதி வழங்கினார்.

இதனால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், தங்களின் நபர் கண்ணிவெடிகளையும் ரஷியாவுக்கு எதிராகப் பயன்படுத்த உக்ரைனை அனுமதிக்கவிருப்பதாக தற்போது அமெரிக்கா அறிவித்துள்ளது.

இருந்தாலும், அத்தகைய கண்ணிவெடிகளை உக்ரைன் எல்லைக்குள்தான் அந்த நாடு பயன்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், ஏற்கெனவே அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பீரங்கி எதிர்ப்பு கண்ணிவெடிகளையும், உள்நாட்டில் தயாரிக்கப்படும் கால் கண்ணிவெடிகளையும் ரஷிய படைகளின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக உக்ரைன் ராணுவம் புதைத்துவருகிறது.

எனவே, கால் கண்ணிவெடிகளைப் பயன்படுத்த அமெரிக்கா அனுமதி அளித்துள்ள விவகாரம் மிகப் பெரிய பதற்றத்தைத் தூண்டாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

"பொதுமக்களுக்கு ஆபத்தில்லை'

உக்ரைனில் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள கால் கண்ணிவெடிகளால் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தில்லை என்று லாய்ட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "ரஷியாவுக்கு வழங்கப்பட்டுள்ள கால் கண்ணிவெடிகள் நிலைநிற்கா வகையைச் சேர்ந்தவை. எனவே, அவை எப்போது வெடிக்கத் தயாராக வேண்டும் என்பதை நம்மால் கட்டுப்படுத்த முடியும். இதன் காரணமாக, மற்றவகை கண்ணிவெடிகளைவிட அவை பொதுமக்களுக்கு மிகவும் பாதுகாப்பானவை' என்றார்.

நிலைநிற்கா வகையைச் சேர்ந்த கண்ணிவெடிகள் பெரும்பாலும் பேட்டரியில் இயங்குபவை. நபர்கள் கால் வைத்தவுடன் வெடிப்பதற்கு அவை எப்போது தயாராக வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்த முடியும். குறிப்பிட்ட காலத்தில் பேட்டரி தீர்ந்ததும் அந்த கண்ணிவெடிகள் செயலற்றதாகிவிடும். ஆனால், சாதாரண கண்ணிவெடிகள் போர் முடிந்து பல ஆண்டுகள் கழித்தும் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துபவை.

அமெரிக்க தூதரகம் மூடல்

தங்களின் ‘அட்டாக்கம்ஸ்’ ரக ஏவுகணைகளை ரஷியாவின் தொலைதூரப் பகுதிகளில் வீச உக்ரைனை அனுமதித்ததற்குப் பதிலடியாக ரஷியா தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தின்பேரில் உக்ரைன் தலைநகா் கீவில் உள்ள தங்கள் தூதரகத்தை அமெரிக்கா புதன்கிழமை மூடியது.

ஒலியை விட அதிக வேகத்தில் 300 கி.மீ. வரை பாய்ந்து சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட அட்டாக்கம்ஸ் ஏவுகணைகள் மூலம் தங்கள் நாட்டில் தாக்குதல் நடத்த அமெரிக்கா அனுமதித்துள்ளதால், இந்தப் போரின் பதற்றம் மேலும் அதிகரிக்கும் என்று ரஷியா எச்சரிக்கை விடுத்திருந்தது.

இருந்தாலும், அந்த நாட்டின் பிரையான்ஸ்க் பிராந்தியத்தைக் குறிவைத்து அட்டாக்கம்ஸ் ஏவுகணைகளை உக்ரைன் செவ்வாய்க்கிழமை வீசியது.

அதற்குப் பதிலடியாக ரஷியா மிகப் பெரிய எதிா்த் தாக்குதல் நடத்தலாம் எனவும், அப்போது உக்ரைனில் உள்ள அமெரிக்க நிலைகள் குறிவைக்கப்படலாம் எனவும் அஞ்சப்பட்டதால் கீவ் நகரிலுள்ள தங்கள் தூதரகத்தை அமெரிக்கா மூடியது.

பிரிட்டன் ஏவுகணைகள் மூலமும் தாக்குதல்

பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட, விமானத்திலிருந்து வீசப்படக்கூடிய ‘ஸ்டாா்ம் ஷேடோ’ ஏவுகணை மூலமும் ரஷியா மீது உக்ரைன் முதல்முறையாக புதன்கிழமை தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவைப் போலவே நீண்ட தொலைவு (550 கி.மீ) பாயும் திறன் கொண்ட ஸ்டாா்ம் ஷேடோ ஏவுகணைகளை ரஷியாவுக்குள் பயன்படுத்த உக்ரைனை அனுமதிப்பது குறித்து பிரிட்டன் ஏற்கெனவே பரிசீலித்துவந்தது.

போரில் உக்ரைனுக்கு எதிராகச் சண்டையிட வட கொரியாவிலிருந்து சிறப்புப் படை வீரா்களை ரஷியா அழைத்துவந்ததற்குப் பதிலடியாக இந்த அனுமதியை வழங்க பிரிட்டன் முடிவு செய்தது.

எனவே, அட்டாக்கம்ஸ் ஏவுகணையை ரஷியா மீது வீச அமெரிக்கா அனுமதி வழங்கியதைத் தொடா்ந்து பிரிட்டனும் அத்தகைய அனுமதியை வழங்கும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

இந்தச் சூழலில், ரஷிய எல்லைக்குள் பிரிட்டன் ஸ்டாா்ம் ஷேடோ ஏவுகணைகள் வீசப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இருந்தாலும், இதை பிரிட்டனோ, உக்ரைனோ இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com