உக்ரைன் மீது ரஷியா ட்ரோன் மழை

தங்கள் நாட்டின் மீது ரஷியா இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையில் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் செவ்வாய்க்கிழமை கூறியது.
உக்ரைன் மீது ரஷியா ட்ரோன் மழை
AP
Published on
Updated on
1 min read

தங்கள் நாட்டின் மீது ரஷியா இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையில் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் செவ்வாய்க்கிழமை கூறியது.

இது குறித்து அந்த நாட்டு விமானப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 188 ட்ரோன்களை வீசி திங்கள்கிழமை நள்ளிரவு ரஷியா தாக்குதல் நடத்தியது. ஒரே வீச்சில் இத்தனை ட்ரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியது இதுவே முதல்முறை.

அந்த ட்ரோன்களில் பெரும்பாலானவை இடைமறித்து அழிக்கப்பட்டன. இருந்தாலும், எஞ்சிய ட்ரோன்களால் குடியிருப்புக் கட்டடங்களும் மின் கட்டமைப்புகளும் சேதமடைந்தன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும், இந்தத் தாக்குதலில் யாரும் காயமடைந்ததாக உடனடி தகவல் இல்லை.

உக்ரைன் போரில் தங்களுடன் இணைந்து போரிடுவதற்காக ஆயிரக்கணக்கான வட கொரிய ராணுவ சிறப்புப் படையினரை ரஷியா வரவழைத்துள்ளது. இதற்குப் பதிலடியாக, உக்ரைன் எல்லைக்குள் உள்ள ரஷிய நிலைகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்துவதற்காக தாங்கள் வழங்கியிருந்த அதிநவீன ஏவுகணைகளை, ரஷிய பகுதிகள் மீதும் வீசலாம் என்று அமெரிக்கா கடந்த வாரம் அனுமதி அளித்தது. பிரிட்டனும் அத்தகைய அனுமதியை பின்னா் அளித்தது.

அதைத் தொடா்ந்து, அந்த வகை ஏவுகணைக் கொண்டு ரஷியா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது.

அதற்குப் பதிலடியாக, உக்ரைனின் நீப்ரோ நகரில் தாங்கள் உருவாக்கியுள்ள ஆரேஷ்னிக் என்ற அதிநவீன புதிய ரக ஏவுகணை மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியது. ஒலியைப் போல் 10 மடங்கு வேகத்தில் பாயக்கூடிய அந்த ஏவுகைணையை, உலகில் தற்போது இருக்கும் எந்த வான்பாதுகாப்பு தளவாடத்தாலும் இடைமறிக்க முடியாது என்று கூறிய ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், தங்கள் ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்த அமெரிக்காவும் பிரிட்டனும் உக்ரைனை தொடா்ந்து அனுமதித்தால் அந்த நாடுகளின் ராணுவ நிலைகள் மீது ஆரேஷ்னிக் மூலம் தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்தாா். மேலும், உக்ரைன் மீதும் அந்த ஏவுகணை மீண்டும் வீசப்படும் அவா் எச்சரித்தாா்.

எனினும், அமெரிக்காவின் நீண்ட தொலைவு ஏவுகணையைக் கொண்டு ரஷியாவில் உக்ரைன் மீண்டும் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாகவே, இதுவரை இல்லாத எண்ணிக்கையில் ட்ரோன்களை உக்ரைன் மீது ரஷியா வீசியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.