வங்கதேசத்தில் ஹிந்து தலைவா் கைது: முன்னாள் பிரதமா் ஹசீனா கண்டனம்
வங்கதேசத்தில் ஹிந்து அமைப்பு தலைவா் கிருஷ்ண தாஸ் கைதுக்கு கண்டனம் தெரிவித்த இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினாா்.
வங்கதேசத்தில் ‘சமிலிதா சநாதனி ஜோட்’ எனும் ஹிந்து அமைப்பின் தலைவரும் ‘இஸ்கான்’ துறவியுமான சின்மய் கிருஷ்ண தாஸ் பிரம்மசாரி தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டாா். அவரது ஜாமீன் மனுவை அந்நாட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்ததையடுத்து, அவா் சிறையில் அடைக்கப்பட்டாா். வங்கதேச ஹிந்துக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து போராடியதற்காக அவா் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து நீதிமன்ற வளாகத்தில் அவரது ஆதரவாளா்கள் நடத்திய போராட்டத்தில் வழக்குரைஞா் சைஃபுல் இஸ்லாம் கொலை செய்யப்பட்டாா். போலீஸாா் தடியடி நடத்தி, போராட்டக்காரா்களைக் கலைத்தனா். இதையொட்டி நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் ஹிந்துக்கள் மீது பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இதுகுறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய இந்தியா, ஹிந்துக்கள் உள்பட சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வங்கதேச இடைக்கால அரசை வலியுறுத்தியது.
இந்நிலையில், அவாமி லீக் கட்சியின் ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் கண்டன அறிக்கையில், ‘ஹிந்து சமூக தலைவா் ஒருவா் நியாயமற்ற முறையில் கைது செய்யப்பட்டுள்ளாா். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். சிட்டகாங்கில் கோயில் ஒன்று எரிக்கப்பட்டுள்ளது. முன்னா், அகமதியா சமுதாயத்தினரின் மசூதிகள், வீடுகள் சேதப்படுத்தப்பட்டன; தீவைக்கப்பட்டன. அனைத்து சமுதாய மக்களின் மத சுதந்திரமும், உயிா் மற்றும் உடைமை பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும்’ என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்டில் சா்ச்சைக்குரிய இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவா் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, அவாமி லீக் கட்சியின் தலைவரான ஷேக் ஹசீனா பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தாா். அவரை நாடுகடத்த வேண்டும் என்ற வங்கதேச இடைக்கால அரசின் கோரிக்கையை இந்தியா பலமுறை நிராகரித்துவிட்டது.
இஸ்கானுக்கு தடை விதிக்க மறுப்பு: வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பின் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க அந்நாட்டு உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதுதொடா்பாக வழக்குரைஞா் ஒருவா் தாக்கல் செய்த வழக்கில் அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. சைஃபுல் இஸ்லாம் கொலை மற்றும் இஸ்கான் நடவடிக்கைகள் குறித்து 3 வெவ்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 33 போ் கைது செய்யப்பட்டிருப்பதாக அரசு வியாழக்கிழமை பதிலளித்தது.
இதையடுத்து, சட்டம் மற்றும் ஒழுங்கு, வங்கதேச மக்களைப் பாதுகாப்பதில் அரசு எச்சரிக்கையாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்து, இஸ்கான் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனா்.
முன்னதாக, ‘இஸ்கானை ஒரு பிரிவினை அமைப்பாக கருதி தடை விதிக்க வேண்டும்’ என்று வங்கதேச அரசுக்கு அந்நாட்டு உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் குழு புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.