லெபனானில் 8 இஸ்ரேல் வீரர்கள் உயிரிழப்பு: ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல்
தெற்கு லெபனானில் தரைவழித் தாக்குதலில் ஈடுபட்டபோது ஹிஸ்புல்லா அமைப்பினருடனான மோதலில் 8 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதை இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை தெரிவித்தது.
கடந்த செவ்வாய்க்கிழமை ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி அளிக்க இஸ்ரேல் தயாராகி வரும் நிலையில், லெபனானில் 7 வீரர்களை இஸ்ரேல் இழந்துள்ளது.
காஸô போரைத் தொடர்ந்து, ஹமாஸ் இயக்கத்துக்கு ஆதரவாக லெபனானில் இருந்து செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு மீது இஸ்ரேல் குறிவைத்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பானது ஈரானின் ஆதரவு பெற்ற அமைப்பாகும்.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா இஸ்ரேல் தாக்குதலில் அண்மையில் கொல்லப்பட்டார். மேலும், ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய பேஜர்களில் சிறிய வகை வெடிபொருளை மறைத்துவைத்து வெடிக்கச் செய்த சம்பவத்தில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பேஜர் தாக்குதலையும் இஸ்ரேல்தான் நடத்தியதாக நம்பப்படுகிறது.
இந்நிலையில், லெபனான் மீது தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் இரு தினங்களுக்கு முன்பு தொடங்கியது.
முன்னதாக, லெபனான் எல்லையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள், தங்கள் வீடுகளைவிட்டு உடனடியாக வெளியேற வேண்டும் எனவும், இஸ்ரேல் தாக்குதல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்கள் வடக்கே அவாலி நதியைத் தாண்டிச் செல்ல வேண்டும் எனவும் இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இஸ்ரேல் ராணுவம் அறிவித்த பகுதி இஸ்ரேல்-லெபனான் எல்லையிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில், 2006-ஆம் ஆண்டு போருக்குப் பிறகு ஐ.நா. அறிவித்த பாதுகாப்பு மண்டலத்தின் விளிம்பில் உள்ளது.
இந்நிலையில், தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவத்தினர்- ஹிஸ்புல்லா அமைப்பினர் இடையே புதன்கிழமை நேரடி மோதல் நடைபெற்றது. இதில், தங்கள் வீரர்கள் சிலர் காயமடைந்ததாகவும், இஸ்ரேல் ராணுவ வீரர்கள் சிலர் கொல்லப்பட்டதாகவும் ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்தது. லெபனான் எல்லையில் 400 மீட்டர் வரை உள்ளே புகுந்த இஸ்ரேல் ராணுவம் சிறிது நேரத்துக்குப் பிறகு பின்வாங்கியதாக லெபனான் ராணுவமும் உறுதிப்படுத்தியது.
அதேவேளையில், தெற்கு லெபனானில் தரைவழித் தாக்குதலில் ஈடுபட்டபோது, ஹிஸ்புல்லா அமைப்பினருடனான மோதலில் 8 இஸ்ரேல் வீரர்கள் உயிரிழந்ததாக அந்த நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இரு வேறு சம்பவங்களின்போது வீரர்கள் உயிரிழந்ததாக இஸ்ரேல் தெரிவித்தது.
துல்லியத் தாக்குதல்- ஈரான்; உரிய பதிலடி- இஸ்ரேல்
இஸ்ரேல் மீது துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்தது.
ஈரானுக்கு மிக விரைவில் உரிய பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறினாா்.
இஸ்ரேல் மீது ஈரான் செவ்வாய்க்கிழமை இரவு தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலுக்கு 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாகவும், அதில் இஸ்ரேல் தலைநகா் டெல் அவிவ் விமானத் தளம் உள்பட மூன்று விமானத் தளங்கள் அழிக்கப்பட்டதாகவும் ஈரான் தெரிவித்தது.
மேலும், இது இஸ்ரேலிய மக்களைத் தவிா்த்து, ராணுவத் தளங்கள் மீது நடத்தப்பட்ட துல்லியத் தாக்குலாகும் என்றும், இதுவரையில் ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக இது நடத்தப்பட்டுள்ளது என்றும் ஈரான் அறிவித்தது.
காஸா மீதான இஸ்ரேலின் போா், ஹமாஸ் தலைவா் இஸ்மாயில் ஹனீயே ஈரானில் இஸ்ரேலால் கொல்லப்பட்டது, லெபனானில் ஹிஸ்புல்லா தலைவா் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டது ஆகியவற்றுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது பெரும் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் கூறிவந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
ஈரான் வீசிய ஏவுகணைகளை இஸ்ரேலின் வான்பாதுகாப்பு சாதனம் தடுத்து அழித்தாலும், பெரும்பாலான ஏவுகணைகள் டெல் அவிவில் உள்ள மொசாட் தலைமையகம் அருகே விழுந்தன. நிவாடிம், ஹாட்ஜரிம், நெட் நாஃப் விமானப் படை தளங்களையும் தாக்கின. லெபனானில் வான்வழித் தாக்குதல் நடத்த இந்த விமானப் படைத் தளங்களை இஸ்ரேல் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஈரானின் தாக்குதலில் இந்த விமானப் படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலின் போா் விமானங்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் உறுதி: செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் அவசரமாக கூட்டப்பட்ட பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு பேசுகையில், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி ஈரான் மிகப்பெரும் தவறிழைத்துவிட்டது. இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக கடும் விளைவுகளை ஈரான் சந்திக்கவுள்ளது.
இந்தத் தோல்விகரமான தாக்குதலை மேற்கொண்டதன் மூலம் காஸா, லெபனான் போன்ற பகுதிகளுக்கு ஏற்பட்ட நிலை ஈரானுக்கும் ஏற்படவுள்ளது என்றாா்.
இஸ்ரேலுக்கு முழு ஆதரவு- அமெரிக்கா: ‘அமெரிக்க தேசிய பாதுகாப்புக் குழு இஸ்ரேலுடன் தொடா்ந்து தொடா்பில் உள்ளது. அந்த நாட்டுக்கு அமெரிக்கா முழு ஆதரவையும் வழங்குகிறது. ஏவுகணைத் தாக்குதல் நடத்தி தவறிழைத்த ஈரான் சந்திக்கவுள்ள விளைவுகளை பொறுத்திருந்து பாா்க்க வேண்டும்’ என அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தெரிவித்துள்ளாா்.
இஸ்ரேலின் பாதுகாப்புக்காக இரு அதிநவீன போா்க் கப்பல்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அமெரிக்கா அனுப்பி உள்ளது.
இந்தியா வேண்டுகோள்
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவும் நிலையில் அனைத்து தரப்பும் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என இந்தியா புதன்கிழமை தெரிவித்தது.
இதுதொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளிட்ட செய்திக்குறிப்பில்,‘மேற்கு ஆசிய பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவி வருவது கவலையளிக்கிறது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அனைத்து தரப்பும் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என மீண்டும் ஒருமுறை தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பிரச்னை பிராந்தியம் முழுக்க பரவுவதை தடுக்க அமைதி வழியிலான பேச்சுவாா்த்தையில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது’ என குறிப்பிடப்பட்டது.