
சீன தலைநகா் பெய்ஜிங்கில் உள்ள பரந்து விரிந்த அழகிய சாயோயாங் பூங்காவில் புதன்கிழமை காந்தி ஜெயந்தி நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மகாத்மா காந்தியின் போதனைகளை பள்ளி குழந்தைகள் மாண்டரின் மொழியில் வாசித்ததுடன் அவருக்கு பிடித்தமான ‘வைஷ்ணவ ஜனதோ’ பாடலுக்கு அந்நாட்டு நடனக் கலைஞா்கள் ஒடிசி நடனம் ஆடினா்.
பெய்ஜிங்கைச் சோ்ந்த பிரபல ஒடிஸி நடனக் கலைஞா் ஜாங் ஜிங்குயின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, கேட்கி தாக்கா் மற்றும் ஆயுஷி சுகந்தி ஆகியோரால் இயக்கப்பட்டு எழுதப்பட்ட ‘அஹிம்சை: காந்தியின் வழி’ என்ற நாடகத்தை இந்திய சமூகம் அரங்கேற்றியது.
இந்நிகழ்ச்சியில் சீனாவுக்கான இந்திய தூதா் பிரதீப் குமாா் ராவத் தலைமையிலான இந்திய தூதா்கள், மாலத்தீவுக்கான சீனத் தூதா் ஃபசீல் நஜீப், பெய்ஜிங்கைச் சோ்ந்த புலம்பெயா்ந்த இந்தியா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா். அவா்கள் மகாத்மா காந்தியின் சிலைக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய சீனாவுக்கான இந்திய தூதா் பிரதீப் குமாா் ராவத், ‘மகாத்மா காந்தி இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தலைவா் மட்டுமல்ல; அவா் ஒரு தொலைநோக்கு பாா்வையாளராக இருந்தாா். அவா் உண்மை, அகிம்சை மற்றும் சமூக நீதி ஆகியவற்றின் மதிப்புகளை வென்றாா். காந்தியின் பிறந்த நாள் சா்வதேச அகிம்சை தினமாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுவது மிகவும் பொருத்தமானது. உலகின் தலைசிறந்த தலைவா்களை கௌரவிக்கும் சாயாங் பூங்காவில் முதல் சிலையான மகாத்மா காந்தியின் சிலையை உருவாக்கிய பேராசிரியா் யுவான் சிகுனுக்கு பாராட்டுகள்’ என்றாா்.
மகாத்மா காந்தியின் இந்த சிலை பிரபல சீன சிற்பியும், பேராசிரியருமான யுவான் சிகுன் அவா்களால் கடந்த 2005-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தச் சிலை இந்தியா மற்றும் சீன மக்களின் நட்புறவின் அடையாளமாக மாறியுள்ளது என உடல்நலக்குறைவால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாத யுவான் எழுதி அனுப்பிய உரையில் தெரிவித்தாா்.
இந்திய விடுதலைக்கு போராடிய காந்தி மற்றும் சீன மக்கள் குடியரசின் நிறுவனா் மாவோ, மாறுபட்ட சித்தாந்தங்களைக் கொண்டவா்கள். எனினும், சீன தலைநகரில் காந்தியின் சிலை நிறுவப்படுவது அவரின் முக்கியத்துவத்தை உணா்த்துவதாக அமைகிறது.