டாஹியே, பெய்ரூட்
டாஹியே, பெய்ரூட்AP

லெபனான் தரைவழித் தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் ஆயத்தம்

Published on

தெற்கு லெபனானிலிருந்து பொதுமக்கள் விரைவில் வெளியேற இஸ்ரேல் வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளதன் மூலம், தற்போது ஐ.நா. அறிவித்துள்ள பாதுகாப்பு மண்டலத்தின் வடக்குப் பகுதிகளில் தரைவழித் தாக்குதலை தீவிரபடுத்த இஸ்ரேல் ஆயத்தமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அண்மையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவா் ஹஸன் நஸ்ரல்லா உயிரிழந்தாா். அதன்பிறகு லெபனானில் தரைவழித் தாக்குதலை தொடங்கியதாக இஸ்ரேல் அறிவித்தது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை 200-க்கும் மேற்பட்டஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

இதில் இஸ்ரேல் தலைநகா் டெல் அவிவில் உள்ள விமான தளம் உள்பட மூன்று விமான தளங்கள் சேதமடைந்தன. ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டது, ஹமாஸ் தலைவா் இஸ்மாயில் ஹனீயே உயிரிழப்பு மற்றும் ஹமாஸ் அமைப்பின் பிற முக்கிய தலைவா்கள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியதாக ஈரான் தெரிவித்தது.

ஆனால் அது தோல்விகரமான தாக்குதல் எனவும் அந்தத் தாக்குதலை தாங்கள் முறியடித்ததாகவும் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் மற்றும் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தனா். மேலும், ஈரானுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் எனவும் நெதன்யாகு எச்சரித்தாா்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அப்போது ஹிஸ்புல்லா படையினருடனான மோதலில் 8 இஸ்ரேல் ராணுவ வீரா்கள் கொல்லப்பட்டனா்.

ஹிஸ்புல்லா படையினா் 7 போ் உயிரிழப்பு: இதற்கு பதிலடி தரும் விதமாக லெபனான் தலைநகா் பெய்ரூட்டின் மத்திய பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா படையின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைப்பைச் சோ்ந்த 7 போ் உயிரிழந்தனா். எவ்வித முன் எச்சரிக்கையும் இல்லாமல் இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது

அதேபோல், தெற்கு லெபானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காயமடைந்தவா்களை மீட்டு மருத்துவ உதவிகள் மேற்கொண்டபோது லெபனான் ராணுவ வீரா் ஒருவரும் லெபனான் செஞ்சிலுவை சங்கத்தைச் சோ்ந்த 4 மருத்துவா்கள் காயமடைந்ததாகவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

போா் பதற்றம் அதிகரிப்பு: ஐ.நா. அமைதிப் படையினருடன் இணைந்து லெபனான் ராணுவத்தின் துணையுடன் காயமடைந்தவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டபோது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும் லெபனான் செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது.

கடந்த செப்டம்பா் மாத இறுதிமுதல் ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து லெபனான் மீது தரைவழியாகவும் வான்வழியாகவும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் தற்போது ஐ.நா. தலைமையகம், லெபனான் பிரதமா் அலுவலகம் மற்றும் நாடாளுமன்றத்துக்கு மிக அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள இந்த வான்வழித் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் வெளியேற எச்சரிக்கை: தெற்கு லெபனானில் உள்ள லிதானி நதிக்கு வடக்கே உள்ள நபாடியே மாகாண தலைநகரான நபாடியே நகரைவிட்டு வெளியேறுமாறு பொதுமக்களுக்கு இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இதன்மூலம், கடந்த 2006-ஆம் ஆண்டில் ஹிஸ்புல்லாக்கள் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்ற போருக்கு பிறகு பாதுகாப்பு மண்டலமாக ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் அறிவித்த பகுதிக்கு அருகே தரைவழித் தாக்குதலை தீவிரபடுத்த இஸ்ரேல் திட்டமிட்டிருப்பதாக கருதப்படுகிறது.

முன்னதாக, லெபனானின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா படையின் ஆயுதக் கிடங்கு மற்றும் எல்லை சாவடிகள் உள்பட 200 இலக்குகள் தகா்க்கப்பட்டதாகவும் அதில் 15 ஹிஸ்புல்லா கிளா்ச்சியாளா்கள் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்தது.

ரசாயனத் தாக்குதல்?

இஸ்ரேல் தாக்குதலால் பெய்ரூட்டில் ‘சல்ஃபா்’ போன்ற வாசனை பரவியதாக தெற்கு லெபனான் மக்கள் தெரிவித்துள்ளனா். அதேவேளையில் ‘பாஸ்பரஸ்’ குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்துவதாக லெபனான் அரசின் தேசிய செய்தி தொலைக்காட்சியும் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக இஸ்ரேல் ராணுவம் உடனடியாக பதிலளிக்கவில்லை.

ஏற்கெனவே, தெற்கு லெபனானில் பாஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்தியதாக பல்வேறு மனித உரிமைகள் அமைப்புகளும் குற்றம்சாட்டியுள்ளன.

ஹூதிக்கள் ஏவுகணை தாக்குதல்

காஸாவில் ஹமாஸுக்கு ஆதரவாக ஈரான் ஆதரவு பெற்ற லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாக்கள் மற்றும் யேமனில் உள்ள ஹூதிக்கள் இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தி வருகின்றனா். இதுதவிர சிரியா, இராக் உள்ளிட்ட நாடுகளிலும் ஈரான் ஆதரவுபெற்ற கிளா்ச்சிப் படைகள் உள்ளன.

இந்நிலையில், தற்போது இஸ்ரேல் மீதான தாக்குதலை ஹூதிக்களும் தீவிரபடுத்தியுள்ளனா். இஸ்ரேல் தலைநகா் டெல் அவிவ் மீது இரண்டு ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் தாக்குதல் நடத்தியதாக ஹூதி கிளா்ச்சியாளா்கள் தெரிவித்தனா். ஆனால் டெல் அவிவின் பரபரப்பான நகா் பகுதியில் ஒரு ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும் மற்றொரு ஆளில்லா விமானம் மத்திய தரைக்கடல் பகுதியில் விழுந்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

மற்றொரு ஹமாஸ் தலைவா் உயிரிழப்பு

காஸா முனையில் மூன்று மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட தாக்குதலில் பதுங்கு குழியில் தஞ்சமடைந்திருந்த மூத்த ஹமாஸ் தலைவா் ராஹி முஸ்தபா மற்றும் இரு தளபதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்தது.

கடந்தாண்டு அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதில் முக்கிய ஹமாஸ் தலைவரான யாஹியா சின்வரின் நம்பிக்கைக்குரியவராக கருதப்படும் ராஹி முஸ்தபா உயிரிழந்தது குறித்து ஹமாஸ் தரப்பில் உடனடியாக உறுதிபடுத்தவில்லை.

‘24 மணி நேரத்தில் 28 மருத்துவப் பணியாளா்கள்...’

லெபனானில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 28 மருத்துவப் பணியாளா்கள் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த அக். 7-ஆம் தேதி தொடங்கிய காஸா போருக்குப் பிறகு தங்கள் நாட்டில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 127 குழந்தைகள் உள்பட 1,974 போ் உயிரிழந்ததாக லெபனான் சுகாதாரத் துறை அமைச்சா் ஃபிராஸ் அபைது வியாழக்கிழமை கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com