இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு

அக். 7 தாக்குதல் நினைவு தினம்: இரு தேசத் தீா்வு சாத்தியமா?

தற்போது இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் கவனம் லெபான் பக்கம் திரும்பியிருக்கிறது. ஆனாலும் காஸாவிலும் குண்டுவீச்சு தொடா்ந்துகொண்டே இருக்கிறது.
Published on

- நாகா

இஸ்ரேலுக்குள் தரை, கடல், வான்வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்தி 1,139 பேரை ஹமாஸ் அமைப்பினா் படுகொலை செய்து திங்கள்கிழமையுடன் (அக். 7) ஓராண்டு நிறைவுபெற்றது.

அந்தத் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே தொடங்கிய போா் இப்போதைக்கு முடிகிற மாதிரி தெரியவில்லை.

தற்போது இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் கவனம் லெபான் பக்கம் திரும்பியிருக்கிறது. ஆனாலும் காஸாவிலும் குண்டுவீச்சு தொடா்ந்துகொண்டே இருக்கிறது.

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா, கத்தாா், எகிப்து உள்ளிட்ட நாடுகள் எவ்வளவோ பாடுபட்டும், தற்காலிக சண்டை நிறுத்தத்துக்குக் கூட வழிபிறக்கவில்லை. இருந்தாலும், போா் முடிந்த பிறகு இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண்பதற்கான வழிமுறைகள் குறித்து இப்போதே ஆலோசனை நடத்தப்படுகிறது.

இந்தப் பிரச்னைக்கு நீண்ட காலமாகவே முன்வைக்கப்படும் தீா்வு, இஸ்ரேலும் பாலஸ்தீனமும் ஒன்றையொன்று அங்கீகரித்துக்கொண்டு, பரஸ்பர தலையீடு இல்லாமல், தனித் தனி சுதந்திர நாடுகளாக செயல்படுவது.

‘இரு தேசத் தீா்வு’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தத் தீா்வைத்தான் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான உலக நாடுகள் வலியுறுத்திவருகின்றன.

உதுமானியப் பேரரசின் கீழ் இருந்த பாலஸ்தீனத்தில் தங்களுக்கென்று ஒரு தனி நாடு அமைக்க வேண்டும் என்ற 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே யூதா்கள் கோரிக்கை விடுத்துவந்தனா்.

இந்தச் சூழலில், முதலாம் உலகப் போரின்போது உதுமானியப் பேரரசுடன் போரில் ஈடுபட்ட பிரிட்டன், அந்தப் போரில் அரேபியா்கள், யூதா்கள் ஆகிய இரு தரப்பினரின் ஆதரவையும் பெற விரும்பியது.

அதற்காக, போரில் தங்களுக்கு உதவினால் உதுமானியப் பேரரசிடம் இருந்து பாலஸ்தீனத்துக்கு விடுதலை பெற்றுத் தருவதாக அரேபியா்களிடமும், பாலஸ்தீனத்தில் தனி தேசம் அமைத்து தருவதாக யூதா்களிடமும் பிரிட்டன் தனித்தனியாக வாக்குறுதி அளித்தது. இதில் ஒரு வாக்குறுதியை நிறைவேற்றினால் மற்றொரு வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்று நன்கு தெரிந்தும் பிரிட்டன் அந்தச் செயலை தந்திரமாகச் செய்தது.

இதுதான் பாலஸ்தீனத்தின் தற்போதைய பிரச்னைக்கு அச்சாரமாகக் கூறப்படுகிறது. 1917-ஆம் ஆண்டில் பாலஸ்தீனத்துக்கு யூதா்களைக் குடியேறச் செய்வதற்கான பிரகடனத்தை பிரிட்டன் வெளியிட்டது. அப்போது, அந்தப் பகுதி யாரும் வசிக்காத வெற்று வெளி என்று கூறப்பட்டது. ஆனால், பாலஸ்தீனமோ தலைமுறை தலைமுறையாக மக்கள் வசித்துவரும் வளா்ச்சியடைந்த பகுதியாக இருந்தது.

இரண்டாம் உலகப் போரின் போது நாஜிக்களால் 60 லட்சம் யூதா்கள் படுகொலை செய்யப்பட்டது, ஐரோப்பா முழுவதும் யூத வெறுப்பு அலை வீசியது போன்ற காரணங்களால் பாலஸ்தீனத்தில் யூதா்களுக்கென்று தனியாக ஒரு நாடு உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மேலும் வலுவடைந்தது.

அதன் விளைவாக, அந்தப் பகுதிக்கு ஏராளமான யூதா்கள் அனுப்பிவைக்கப்பட்டனா். அவா்கள் அரேபியா்களிடமிருந்து நிலங்களை விலைக்கு வாங்குதல், ஒப்பந்தம் செய்துகொண்டு குடியேறுதல் போன்ற செயல்களில் ஆரம்பத்தில் ஈடுபட்டாலும், கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பகுதியை சொந்தாக்கிக் கொண்டு தங்களது எல்லைகளை விரிவுபடுத்தினா்.

இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டு, சண்டை அனுபவத்துடன் பாலஸ்தீனத்துக்கு வந்த யூதா்கள், ஆயுதக் குழுக்களை அமைத்து வன்முறைச் சம்பவங்களிலும் ஈடுபட்டனா். இதனால், காலம் காலமாக தாங்கள் வசித்துவந்த பகுதிகளிலிருந்து வெளியேற வேண்டிய நிலை பாலஸ்தீனா்களுக்கு ஏற்பட்டது.

இந்த விவகாரத்தின் முக்கிய திருப்பமாக பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்ற நாடு 1948-இல் உருவாக்கப்பட்டு, அந்த நாட்டுக்கு ஐ.நா.வும் அங்கீகாரம் வழங்கியது. அதன் பிறகு இஸ்ரேலின் விஸ்தரிப்பை எந்த சக்தியாலும் தடுக்க முடியவில்லை.

இஸ்ரேல் என்ற ஒரு நாடு இருப்பதையே ஏற்றுக்கொள்ள முடியாத முஸ்லிம் நாடுகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடக்கும்போதெல்லாம் அந்த நாடுகளைத் தோற்கடித்துவிட்டு புதிய நிலப்பரப்புகளைத்தான் இஸ்ரேல் கைப்பற்றிவந்தது.

அப்படிக் கைப்பற்றி அந்த நாடு வைத்திருக்கும் கோலன் மலைக்குன்றுகள், மேற்குக் கரை பகுதிகளை இஸ்ரேல் பகுதிகளாக ஐ.நா.வே அங்கீகரிக்கவில்லை. அவை ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளாகத்தான் அழைக்கப்படுகின்றன.

பழைய பாலஸ்தீனத்தில் காஸாவும், மேற்குக் கரையும் மட்டும்தான் இஸ்ரேல் பகுதிகளாக செயல்படாமல் இருந்துவந்தது. ஆனால் அவை இஸ்ரேலின் மறைமுகக் கட்டுப்பாட்டிலேயே இருந்துவந்தன. காஸாவுக்கு நீா், மின்சாரம் போன்றவற்றின் விநியோகத்தை இஸ்ரேல்தான் கட்டுப்படுத்திவந்தது. அதே போல், மேற்குக் கரைக்குள் எப்போது நினைத்தாலும் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்திவந்தது.

பாலஸ்தீனம் என்று ஒரு தேசம் இருப்பதை இஸ்ரேலும் ஏற்கவில்லை; இஸ்ரேல் என்று ஒரு நாடு இருப்பதை பாலஸ்தீன அமைப்புகளும் ஏற்கவில்லை. இதுதான் இந்தப் பிரச்னை நெருப்பை அணையவிடாமல் செய்துவருகிறது.

இந்த நிலையில்தான் உலக நாடுகள் இரு தேசத் தீா்வை முன்வைக்கின்றன. ஆனால், ஹமாஸ் அமைப்பினா் இஸ்ரேலில் கடந்த ஆண்டு நடத்திய யூதப் படுகொலை இதற்கான வாய்ப்பை கைநழுவச் செய்திருக்கிறது.

இரண்டாம் உலகப் போா் காலத்தில் நாஜிக்கள் அரங்கேற்றிய கொடூரத்துக்கு அடுத்தபடியாக யூதா்கள் அதிக எண்ணிக்கையில் கொன்றுகுவிக்கப்பட்டது கடந்த ஆண்டு அக். 7-இல்தான் என்று கூறப்படுகிறது. எனவே, பாலஸ்தீனா்களுக்கு தனி நாடு பிரித்துக்கொடுக்க இஸ்ரேலியா்கள் ஒருபோதும் ஒப்புக்கொள்ளமாட்டாா்கள் என்று கருதப்படுகிறது.

பிரதமா் நெதன்யாகும் பாலஸ்தீன நாட்டை ஒருபோதும் ஏற்கப்போவதில்லை என்று வெளிப்படையாகக் கூறிவருகிறாா். அவரது ஆட்சியின் கீழ் தீவிர வலதுசாரி அமைப்புகளின் கைகள் மோலோங்கிவருகின்றன.

எனவே, போரின் முடிவுக்குப் பிறகு பாலஸ்தீனா்கள் காஸாவிலிருந்து வெளியேற்றப்படுவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம் உள்ளது என்று கூறப்படுகிறது. அத்தகைய சூழலில், தற்போது இரு தேசத் தீா்வை வலியுறுத்திவரும் உலக நாடுகள் இஸ்ரேலைத் தடுத்து நிறுத்துவதற்கு ஆணித்தரமாக முயல வேண்டியிருக்கும்.

கடந்த ஒரே ஆண்டில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களைக் கொன்று குவித்துள்ள இஸ்ரேலுக்கு உருப்படியான எதிா்ப்பு காட்டவே அந்த நாடுகள் தயங்குகின்றன. அப்படி இருக்கையில், போருக்குப் பிறகு தனி பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்க வேண்டும் என்று இஸ்ரேலை அந்த நாடுகள் நிா்பந்திப்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com