
லெபனான் தலைநகர் பெய்ரூட் மற்றும் அதனையொட்டிய நகரங்களில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 22 பேர் பலியாகினர்.
மேலும், 110க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லெபனான் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மத்திய பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினரைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லாக்களுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரில், பெய்ரூட்டில் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இது என ஏபி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஹிஸ்புல்லா ஆயுதக் குழுக்களின் பல்வேறு செயல்பாடுகள் லெபனான் தலைநகர் தெற்கு பெய்ரூட்டில் நடக்கிறது. இதனால், பெய்ரூட்டைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் பெய்ரூட்டின் மத்தியப் பகுதியிலுள்ள கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்தன.
ஹிஸ்புல்லாக்களுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்றுவரும் இப்போரில், பெய்ரூட்டில் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுவாகும்.
பாதுகாப்பு அதிகாரியைக் கொல்ல இலக்கு
இது தொடர்பாக லெபனான் செய்தி நிறுவனம், ஹிஸ்புல்லா குழுவின் பாதுகாப்பு அதிகாரியான வாஃபிக் சாஃபாவைக் குறிவைத்து இந்தத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளதாகத் தெரிவித்தது. பெய்ரூட்டில் தாக்குதலுக்குள்ளான கட்டடத்தில் சாஃபா இல்லை எனவும் குறிப்பிட்டது.
இதையும் படிக்க | ஐ.நா. அமைதிப் படை நிலைகளில் இஸ்ரேல் தாக்குதல்
இதற்கு முன்பு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவா் ஹஸன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.
மேலும், ஹிஸ்புல்லா ஆயுதப் படையின் ஏவுகணைப் பிரிவு தளபதி இப்ராஹிம் குபைசி, சிறப்பு அதிரடிப் படையான ‘ரத்வான்’ படை தளபதி இப்ராஹிம் அக்கீல், முக்கிய தளபதி அகமது வாபி ஹிஸ்புல்லா, விமானப் படைப் பிரிவு தளபதி முகமது சுரூா் உள்ளிட்ட முக்கிய நபர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.