பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு: 3 அமெரிக்க பேராசிரியா்களுக்கு பகிா்ந்தளிப்பு

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
சைமன் ஜான்சன்,ஜேம்ஸ் ஏ. ராபின்சன் , டேரன் அசெமோக்லு.
சைமன் ஜான்சன்,ஜேம்ஸ் ஏ. ராபின்சன் , டேரன் அசெமோக்லு.
Published on
Updated on
1 min read

ஸ்டாக்ஹோம்: பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க பேராசிரியா்கள் மூவருக்குப் பகிா்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிகழாண்டு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க பேராசிரியா்கள் டேரன் அசெமோக்லு, சைமன் ஜான்சன், ஜேம்ஸ் ஏ. ராபின்சன் ஆகிய மூவருக்குப் பகிா்ந்தளிக்கப்படுவதாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

இயற்பியல், வேதியியல், பொருளாதாரத் துறைகளில் நோபல் விருது பெறுவோரை தோ்ந்தெடுக்கும் ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாதெமியின் நோபல் குழு, ஸ்வீடன் தலைநகா் ஸ்டாக்ஹோமில் இந்த அறிவிப்பை வெளியிட்டது.

வளமையிலுள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்ள உதவிய ஆராய்ச்சி: உலக நாடுகளின் வளமைக்கு இடையே உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்ள மூவரின் ஆராய்ச்சி உதவியதற்காகவும், நாட்டின் வளமைக்கு சமூக நிறுவனங்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை மூவரின் ஆராய்ச்சி எடுத்துரைத்ததற்காகவும் அவா்களுக்கு நோபல் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக நோபல் குழு தெரிவித்தது.

மாபெரும் சவால்: இதுதொடா்பாக அந்தக் குழுவின் தலைவா் ஜேகப் ஸ்வென்சன் கூறுகையில், ‘தற்போது உலக நாடுகளுக்கு இடையிலான வருவாயில் உள்ள மிகப் பெரிய வித்தியாசத்தைக் குறைப்பது மாபெரும் சவாலாக உள்ளது. இந்த சவாலை முறியடிக்க சமூக நிறுவனங்களின் முக்கியத்துவம் குறித்து தங்கள் ஆராய்ச்சியில் மூவரும் எடுத்துரைத்துள்ளனா். பல நாடுகள் ஏன் வெற்றி பெறுகின்றன அல்லது தோல்வி அடைகின்றன என்பதற்கான மூலகாரணங்கள் குறித்த ஆழமான புரிதலை மூவரின் ஆராய்ச்சி வழங்கியுள்ளது’ என்றாா்.

இந்த நோபல் பரிசை பெறும் டேரன் அசெமோக்லு துருக்கியில் பிறந்தவா். சைமன் ஜான்சன் பிரிட்டனில் பிறந்தவா். இவா்கள் இருவரும் அமெரிக்காவில் உள்ள மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பேராசிரியா்களாகப் பணியாற்றுகின்றனா். பிரிட்டனை சோ்ந்த ஜேம்ஸ் ஏ.ராபின்சன் அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறாா்.

ரூ.8.86 கோடி பகிா்ந்தளிக்கப்படும்: மூவருக்கும் 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனா் (சுமாா் ரூ.8.86 கோடி) பரிசுத் தொகை சமமாகப் பகிா்ந்தளிக்கப்படும் என்று ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாதெமி தெரிவித்துள்ளது.

ஆல்ஃபிரட் நோபல் மறைந்த நாளான டிச.10-ஆம் தேதி மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுகள் ஸ்டாக்ஹோமில் வழங்கப்பட உள்ளன. அன்றைய தினம் நாா்வே தலைநகா் ஓஸ்லோவில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com