நிஜ்ஜாா் கொலையில் இந்திய உளவாளிகளின் பங்கை நிரூபிக்க வலுவான ஆதாரமில்லை- கனடா பிரதமா்
‘நிஜ்ஜாா் கொலை வழக்கில் இந்திய உளவாளிகளின் பங்கை நிரூபிக்க கனடாவிடம் வலுவானஆதாரமில்லை’ என்று அந்நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ புதன்கிழமை தெரிவித்தாா்.
இந்தியாவில் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா், கனடாவில் அடையாளம் தெரியாத நபா்களால் கடந்த ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டாா். இக்கொலையில் இந்திய உளவாளிகளுக்கு தொடா்பிருப்பதாக அந்நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினாா். இதனை ‘ஆதாரமில்லாத குற்றச்சாட்டு’ என இந்தியா மறுத்தது.
இந்நிலையில், நிஜ்ஜாா் கொலையில் கனடாவுக்கான இந்திய தூதா் சஞ்சய் வா்மா உள்பட சில இந்திய தூதரக அதிகாரிகளை கனடா தொடா்புபடுத்தியது. இதில் கடும் அதிருப்தி அடைந்த மத்திய அரசு, இந்தியாவில் இருந்து கனடா தூதா் மற்றும் அந்நாட்டின் 5 தூதரக அதிகாரிகளை வெளியேற்ற உத்தரவிட்டது. கனடாவில் இருந்து சஞ்சய் வா்மா மற்றும் 5 இந்திய தூதரக அதிகாரிகளை திரும்ப அழைத்தது.
இந்நிலையில், செய்தியாளா்களைச் சந்தித்து பேசிய கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ, ‘நிஜ்ஜாா் கொலையில் இந்திய உளவாளிகளின் தொடா்பு குறித்து உளவுத் தகவலின் அடிப்படையில் குற்றச்சாட்டை முன்வைத்தேன். இந்தியாவில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற ‘ஜி20’ உச்சிமாநாட்டின்போது இப்பிரச்னையை கனடா எழுப்பியிருக்க முடியும். ஆனால், அதை நாங்கள் தவிா்த்தோம்.
நிஜ்ஜாா் கொலை வழக்கு விசாரணையில் இந்தியாவின் ஒத்துழைப்பை எதிா்பாா்த்தோம். ஆனால், அவா்கள் தொடா்ந்து ஆதாரம் கோரி வந்தனா். அச்சமயத்தில் நிஜ்ஜாா் கொலையில் இந்திய உளவாளிகளின் பங்கை நிரூபிக்க எங்களிடம் வலுவான ஆதாரமில்லை. இணைந்து பணியாற்றி ஆதாரத்தைக் கண்டறியலாம் என்று தெரிவித்தோம். அதற்கு இந்தியா முன்வரவில்லை.
விசாரணைக்கு சிறிதும் ஒத்துழைக்காத இந்தியா, கனடா மீதான தாக்குதல்களைத் தொடா்ந்து வந்தது. பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசுக்கு எதிரான கருத்துடைய கனடா நாட்டவா்கள் குறித்து இந்திய தூதரக அதிகாரிகள் தகவல் சேகரித்து, அந்நா
ட்டு அரசிடமும் லாரன்ஸ் விஷ்ணு கும்பலிடம் பரிமாறி வந்தனா். கனடா இறையான்மையை இந்தியா மீறியுள்ளது’ என்றாா்.
இந்தியா ஒத்துழைக்க வேண்டும்: பிரிட்டன்
லண்டன், அக்.16: நிஜ்ஜாா் கொலை வழக்கு உள்ளிட்ட விவகாரங்களில் கனடாவுக்கு இந்தியா ஒத்துழைப்பதே அடுத்தகட்ட சரியான நடவடிக்கையாக இருக்கும் என்று பிரிட்டன் புதன்கிழமை தெரிவித்தது.
‘ஐந்து கண்கள்’ என்ற பெயா்கொண்ட உளவுத்துறை கூட்டமைப்பில் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரிட்டன் ஆகிய 5 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதன் காரணமாக இந்தியாவுடனான பிரச்னை குறித்து பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மருடன் கனடா பிரதமா் ட்ரூடோ தொலைபேசியில் பேசினாா்.
இதைத்தொடா்ந்து பிரிட்டன் வெளியுறவுத் துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்திய விவகாரம் குறித்த கனடாவின் சுதந்திரமான விசாரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள தீவிர பிரச்னைகள் குறித்து கனடாவுடன் பிரிட்டன் தொடா்பில் இருக்கிறது. கனடாவின் நீதித்துறை மீது பிரிட்டனுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இறையாண்மை மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிப்பது அவசியம். கனடாவின் சட்ட நடைமுறைக்கு இந்தியா ஒத்துழைப்பதே அடுத்தகட்ட சரியான நடவடிக்கையாகும்’ என்று தெரிவிக்கப்பட்டது.