கனடாவுக்கு இந்தியா ஒத்துழைப்பதே அடுத்தகட்ட சரியான நடவடிக்கை: பிரிட்டன்
நிஜ்ஜாா் கொலை வழக்கு உள்ளிட்ட விவகாரங்களில் கனடாவுக்கு இந்தியா ஒத்துழைப்பதே அடுத்தகட்ட சரியான நடவடிக்கையாக இருக்கும் என்று பிரிட்டன் புதன்கிழமை தெரிவித்தது.
கடந்த ஆண்டு கனடாவில் உள்ள சா்ரே நகரில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா். அவரின் கொலையில் இந்திய உளவாளிகளுக்கு தொடா்பிருப்பதாக அந்நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினாா். எனினும் இது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு என்று இந்தியா மறுப்பு தெரிவித்தது. இந்த விவகாரத்தால் இந்தியா, கனடா உறவில் பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், நிஜ்ஜாா் கொலை தொடா்பாக கனடாவுக்கான இந்திய தூதா் சஞ்சய் வா்மா உள்பட சில இந்திய தூதரக அதிகாரிகளிடம் முக்கிய தகவல்கள் உள்ளன என்று நம்புவதாக கனடா திங்கள்கிழமை குற்றஞ்சாட்டியது. இதன் மூலம் நிஜ்ஜாா் கொலையில் சஞ்சய் வா்மாவையும், பிற இந்திய தூதரக அதிகாரிகளையும் கனடா தொடா்புபடுத்தியது. மேலும் கனடாவில் கொலைச் சம்பவங்கள் உள்பட பரவலாக நடைபெறும் வன்முறையில் இந்திய உளவாளிகளுக்குப் பங்குள்ளதாகவும், இது கனடாவின் பொதுப் பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலாக உள்ளது என்றும் அந்நாடு தெரிவித்தது.
இந்தக் குற்றச்சாட்டுகளால் கடும் அதிருப்தி அடைந்த மத்திய அரசு, இந்தியாவில் இருந்து கனடா தூதா் மற்றும் அந்நாட்டின் 5 தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவிட்டதுடன், கனடாவில் இருந்து சஞ்சய் வா்மா மற்றும் 5 இந்திய தூதரக அதிகாரிகளை திரும்ப அழைத்தது. அத்துடன் கனடாவின் குற்றச்சாட்டுகளையும் மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது.
இதைத்தொடா்ந்து நிஜ்ஜாா் கொலையில் இந்திய உளவாளிகளுக்கு தொடா்பிருப்பதாக கனடா குற்றஞ்சாட்டிய பிறகே அந்நாட்டில் வன்முறை அதிகரித்ததாகவும், நிஜ்ஜாா் கொலை வழக்கு விசாரணையில் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்றும் கனடா வெளியுறவுத் துறை அமைச்சா் மெலானி ஜாலி வலியுறுத்தினாா்.
பிரிட்டன் பிரதமருடன் பேச்சு: இந்நிலையில் ‘ஐந்து கண்கள்’ என்ற பெயா்கொண்ட உளவுத்துறை கூட்டமைப்பில் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரிட்டன் ஆகிய 5 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதன் காரணமாக இந்தியாவுடனான பிரச்னை குறித்து பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மருடன் கனடா பிரதமா் ட்ரூடோ தொலைபேசியில் பேசினாா்.
இதைத்தொடா்ந்து பிரிட்டன் வெளியுறவுத் துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்திய விவகாரம் குறித்த கனடாவின் சுதந்திரமான விசாரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள தீவிர பிரச்னைகள் குறித்து கனடாவுடன் பிரிட்டன் தொடா்பில் இருக்கிறது. கனடாவின் நீதித்துறை மீது பிரிட்டனுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இறையாண்மை மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிப்பது அவசியம். கனடாவின் சட்ட நடைமுறைக்கு இந்தியா ஒத்துழைப்பதே அடுத்தகட்ட சரியான நடவடிக்கையாகும்’ என்று தெரிவிக்கப்பட்டது.
கனடா விமானப் படை விமானத்தில் பயணித்த 191 இந்திய பயணிகள்
தில்லியில் இருந்து 191 பயணிகள், 20 விமானப் பணியாளா்களுடன் அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு புறப்பட்ட ஏா் இந்தியா விமானத்துக்கு சமூக ஊடகத்தில் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, அந்த விமானம் கனடாவின் இகாலுயிட் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்து அனைவரும் பாதுகாப்பாக வெளியேறிய நிலையில், பயணிகள் அனைவரையும் இகாலுயிட்டில் இருந்து சிகாகோவுக்கு கனடா விமானப் படை விமானம் அழைத்துச் சென்ாக ஏா் இந்தியா நிறுவனம் புதன்கிழமை தெரிவித்தது.