கடந்த காலத்தை மறந்துவிட வேண்டும்: இந்தியாவுக்கு நவாஸ் ஷெரீஃப் வேண்டுகோள்
கடந்த கால சம்பவங்களை மறந்துவிட்டு, வருங்காலத்தைக் கருத்தில்கொண்டு நட்புறவு கொண்ட அண்டை நாடுகளாக இந்தியா - பாகிஸ்தான் திகழ வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் வேண்டுகோள் விடுத்தாா்.
இஸ்லாமாபாதில் புதன்கிழமை நடைபெற்ற எஸ்சிஓ அமைப்பு கூட்டத்தில் வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் பங்கேற்றுவிட்டு தாயகம் திரும்பிய மறுநாள் நவாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
மூன்று முறை பிரதமாக இருந்த நவாஸ் ஷெரீஃப், அமைச்சா் ஜெய்சங்கரின் பாகிஸ்தான் பயணம் குறித்து லாகூரில் இந்திய செய்தியாளா்களின் கேள்விக்கு அளித்த பதில்:
அமைச்சா் ஜெய்சங்கரின் பாகிஸ்தான் பயணம் நல்ல தொடக்கம். 2015-இல் பிரதமா் மோடி பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட திடீா் பயணம் வரவேற்கத்தக்கது. அதன் பிறகு நீண்ட காலமாக இரண்டு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு தடைபட்டுள்ளது. இதைப் போக்க இரு நாடுகளும் முயற்சி மேற்கொள்ளும் என்ற நம்புகிறேன்.
இந்தியா - பாகிஸ்தான் நட்புறவு கொண்ட அண்டை நாடுகளாக இருக்க வேண்டும். சண்டையிட்டே கடந்த 70 ஆண்டுகளைக் கடத்திவிட்டோம். அடுத்த 70 ஆண்டுகளுக்கு இது தொடரக் கூடாது. எங்கள் ஆட்சியில் இந்தியாவுடன் நல்லுறவை மேம்படுத்த கடும் முயற்சி மேற்கொண்டோம்.
முந்தைய பிரதமா் இம்ரான் கான் இருநாட்டு நல்லுறவுகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பிரதமா் மோடிக்கு எதிராக சா்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தாா். அண்டை நாட்டு தலைவா்களை இதுபோன்று பேசுவது தவறு.
இரு நாட்டு நல்லுறவு தடைபட்டுள்ளது வருத்தமளிக்கிறது. இந்திய மக்களுக்கு ஆதரவாக நான் பாகிஸ்தான் மக்களிடம் பேசத் தயாராக இருக்கிறேன். அதேபோல் இந்தியா்களும் செய்ய வேண்டும். தற்போது இரு நாடுகளும் பேச்சு மூலம் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வேண்டும்.
கடந்த கால சம்பவங்களை மறந்துவிட்டு, வருங்காலத்தைக் கருத்தில்கொண்டு முன்னேற வேண்டும். இரு நாட்டு வா்த்தகம் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய - பாகிஸ்தான் விவசாயிகளின் வேளாண் உற்பத்திப் பொருள்கள் லாகூா் - அமிருதசரஸுக்கு நேரடியாகச் சென்றடைவதைவிட்டு, தற்போது துபை வழியாக 2 வாரங்கள் கழித்து சென்றடைகின்றன. இதில் யாருக்கு பயன்?.
இந்தியா- பாகிஸ்தான் இடையே இந்தியாவில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றால் அதைக் காண இந்தியா செல்லவும் தயாராக உள்ளேன் என்றாா்.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளால் 2016-இல் இந்தியாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு, அந்நாட்டுடனான பேச்சுவாா்த்தையை இந்தியா நிறுத்தியது. 2019-இல் ஜம்மு- காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு இரு நாடுகள் இடையிலான உறவு மேலும் பாதிக்கப்பட்டது.