சூடானில் 31 லட்சம் மக்களுக்கு காலரா பரவுவதற்கான அபாயம் இருப்பதாக யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.
வடக்கு ஆப்ரிக்க நாடான சூடானில் 5 லட்சம் குழந்தைகள் உள்பட 31 லட்சம் மக்களுக்கு காலரா நோய்த்தொற்று அபாயம் இருப்பதாக யுனிசெஃப் அமைப்பு தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளது.
சூடான் நாட்டின் ஆயுதப் படைக்கும் விரைவு ஆதரவுப் படைக்கும் இடையே கடந்தாண்டு ஏப்ரலில் மோதல் வெடித்தது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர். இந்த மோதலின் காரணமாக சூடானில் தடுப்பூசி பாதுகாப்பு விகிதம் 85 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக குறைந்துள்ளது.
மோதலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 70 சதவீத மருத்துவமனைகள் செயல்படாமல் இருப்பதாகவும், முன்னணி மருத்துவப் பணியாளர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த உள்நாட்டு மோதல் காரணமாக காலரா, மலேரியா, டெங்கு போன்ற பல தொற்று நோய்ப் பாதிப்புகள் ஏற்பட்டு, நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம், சூடானின் சுகாதாரத்துறை சார்பில் நாட்டில் காலரா தொற்று பாதிப்பு அபாயம் குறித்து அறிவிப்பு வெளியானது. அதில், உள்நாட்டு மோதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக மாசடைந்த அசுத்தமான நீரைப் பருகுவதால் காலரா பாதிப்பு அதிகமடைவதாகத் தெரிவித்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.