இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

நெதன்யாகு எச்சரிக்கை... அடுத்த தாக்குதலுக்குத் தயாராகும் இஸ்ரேல்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது தாக்குதல் முயற்சி நடந்ததைத் தொடர்ந்து இன்று லெபனான் மீது அடுத்தக்கட்ட தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகியுள்ளது.
Published on

லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் வசிக்கும் மக்களை ஹிஸ்புல்லா அமைப்பினர் இருக்கும் பகுதிகளிலிருந்து விரைவில் வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதன் மூலம், அடுத்தகட்ட தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் தயாராகியுள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பினர் நேற்று (அக். 19) இஸ்ரேல் பிரதமர் வீட்டில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எச்சரிக்கை விடுக்குமாறு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர், “ஈரான் உதவியுடன் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பு இன்று என்னையும் என் மனைவியையும் கொல்ல முயற்சித்தது மிகப்பெரிய தவறு.

இது என்னையும், இஸ்ரேலையும் பாதுகாக்க நமது எதிரிகளிடம் செய்யும் போரிலிருந்து ஒருபோதும் தடுக்காது.

நான் ஈரானுக்கும், அதன் ஆதரவு தீய இயக்கத்துக்கும் இதனை சொல்லிக் கொள்கிறேன்:

இஸ்ரேல் மக்களை துன்புறுத்த நினைக்கும் ஒவ்வொருவரும் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். நாங்கள் பயங்கரவாதிகளையும் அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களையும் ஒழிப்போம். பணயக்கைதிகளாக காஸாவில் உள்ள இஸ்ரேலியர்களை மீட்போம்.

எங்கள் வடக்கு எல்லை வழியே எங்களின் குடிமகன்களை பாதுகாப்பாக அழைத்து வருவோம். இந்தப் போரின் அனைத்து குறிக்கோள்களையும் அடைந்து, எங்கள் நாட்டின் பாதுகாப்பை வரும் தலைமுறைக்கு கடத்துவதில் இஸ்ரேல் உறுதியாக உள்ளது.

நாங்கள் ஒன்றாக இணைந்து கடவுளின் உதவியுடன் இந்தப் போரில் வெற்றி பெறுவோம்” என்று நெதன்யாகு தனது பதிவில் குறிபிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் பொதுமக்களிடம், “ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு அருகாமையில் நீங்கள் தங்கியிருக்கும் பகுதிகளில் இருந்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உடனடியாக வெளியேறுங்கள். அங்கிருந்து 500 மீட்டர் குறையாமல் நகர்ந்து சென்று விடுங்கள். எங்களின் பாதுகாப்புப் படை விரைவில் தாக்குதல் நடத்த இருக்கிறது” என இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ஆட்ரே அரபி மொழியில் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று சில நாள்களுக்கு முன்பு பெய்ரூட் நகரில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு இவ்வாறான எச்சரிக்கையை வெளியிட்டிருந்தது.

லெபனான் அரசின் தகவலின்படி, கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் இஸ்ரேல் தாக்குதலால் 1,454 மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com