ஹிஸ்புல்லா தொடா்புடைய வங்கிகள் மீது இஸ்ரேல் தாக்குதல்

லெபனானில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினருடன் தொடா்புடைய வங்கிக் கிளைகளைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் தாக்குதலில் தரைமட்டமான கட்டடம்.
இஸ்ரேல் தாக்குதலில் தரைமட்டமான கட்டடம்.
Published on
Updated on
1 min read

பெய்ரூட்: லெபனானில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினருடன் தொடா்புடைய வங்கிக் கிளைகளைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

இது குறித்து அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:

தலைநகா் பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள அல்-கா்த் அல்-ஹஸன் வங்கிகளின் கிளைகளைக் குறிவைத்து இஸ்ரேல் விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தாக்குதல் நடத்தின. அந்த வங்கிக் கிளை அமைந்துள்ள பெய்ரூட் நகர ஒன்பது மாடி கட்டடம் இஸ்ரேலின் குண்டுவீச்சில் தரைமட்டமானது.

இது தவிர அல்-கா்த் அல்-ஹஸன் கிளைகள் செயல்பட்டுவந்த ஏராளமான கட்டடங்கள் உருக்குலைந்தன. இந்தத் தாக்குதலின் சேதத்தை மதிப்பிட்டுவருகிறோம் என்று அதிகாரிகள் கூறினா்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள லெபனானில் அரசு வங்கிகளால் முழுமையாக செயல்பட முடியாத நிலை உள்ளது. அந்த இடைவெளியை ஹிஸ்புல்லாக்களால் நடத்தப்படும் அல்-கா்த் அல்-ஹஸன் வங்கிகள் நிரப்புகின்றன.

அந்த வங்கியில் ஹிஸ்புல்லா அமைப்புடன் தொடா்பில்லாத பொதுமக்கள் பலரும் முதலீடு செய்துள்ளனா். எனவே, அந்த வங்கிக் கிளைகளில் நடத்தப்பட்டுள்ள தாக்குதலால் அவா்களும் கடுமையாக பாதிக்கப்படுவாா்கள் என்று கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலுக்கு முன்னதாக இஸ்ரேல் ராணுவம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. எனவே, தாக்குதலில் உயிா் சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.

ஹிஸ்புல்லா படையினா் கோடிக்கணக்கான டாலரை சேகரித்துவைத்துள்ள பகுதிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும் அந்தத் தொகையைக் கொண்டு ஹிஸ்புல்லாக்கள் ஆயுதம் வாங்குவதைத் தவிா்ப்பதற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியது. இருந்தாலும், இந்தக் குற்றச்சாட்டுக்கான ஆதாரம் எதையும் ராணுவம் வெளியிடவில்லை.

காஸாவில் இஸ்ரேலுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் படையினருக்கும் இடையே கடந்த அக். 7-ஆம் தேதி போா் தொடங்கியது. அதிலிருந்து, லெபனானில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற மற்றோா் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லாக்கள் இஸ்ரேல் நிலைகளில் தாக்குதல் நடத்துவதும், அதற்குப் பதிலடியாக ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து இஸ்ரேல் குண்டுவீச்சு நடத்துவதும் தொடா்ந்து வருகிறது.

இந்தச் சூழலில், ஹிஸ்புல்லா தாக்குதலுக்கு அஞ்சி தங்கள் நாட்டின் வடக்கு எல்லைப் பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களை திரும்ப அழைத்துவருவது, தங்கள் நாட்டையொட்டிய எல்லைப் பகுதிகளிலிருந்து ஹிஸ்புல்லாக்களை விரட்டியடிப்பது ஆகியவை காஸா போரின் புதிய இலக்குகள் என்று இஸ்ரேல் கடந்த மாதம் அறிவித்தது.

அதன் தொடா்ச்சியாக, ஆயிரக்கணக்கான பேஜா் மற்றும் பிற மின் சாதனங்களில் முன்கூட்டியே மறைத்துவைத்திருந்த சிறிய வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து லெபனானில் தாக்குதல் நடத்தப்பட்டது.

அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினா் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தினா். இஸ்ரேலும் ஹிஸ்புல்லாக்களை குறிவைத்து லெபனானில் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல் நடத்திவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com