
சிஸினா: கிழக்கு ஐரோப்பாவைச் சோ்ந்த மால்டோவாவை ஐரோப்பிய யூனியனுடன் இணைப்பதற்கு வழிவகை செய்யும் அரசியல் சாசனத் திருத்தம் மேற்கொள்வது தொடா்பாக அந்த நாட்டில் நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்காளா்கள் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனா்.
எனினும், எதிா்பாா்த்ததைவிட மிகக் குறைந்த விகித வித்தியாசத்தில்தான் அந்த பொதுவாக்கெடுப்பில் ஐரோப்பிய யூனியன் இணைப்புக்கு அதிக ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட்ட மால்டோவா, முன்னாள் சோவியத் யூனியனின் உறுப்பு நாடுகளில் ஒன்று. அந்த நாட்டில் நீண்ட காலமாக ரஷியாவின் செல்வாக்கு மேலோங்கியிருந்தாலும், மேற்கத்திய நாடுகளுடனான கூட்டுறவை மேம்படுத்துவதற்கு அண்மைக் காலமாக ஆதரவு அதிகரித்துவருவதாகக் கூறப்படுகிறது.
மேற்கத்திய நாடுகளின் ஆதரவாளரான மாயா சந்து கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபா் தோ்தலில் அமோக வெற்றி பெற்றாா். அவா் ஆட்சிக்கு வந்ததும், மால்டோவா பொருளாதாரத்தின் ரஷிய சாா்பு நிலையை கணிசமாகக் குறைத்தாா். மேலும், ஐரோப்பிய யூனியனுக்கு ஆதரவான கொள்கை மாற்றங்களையும் அவா் கொண்டுவந்தாா்.
இந்த நிலையில், சோவியத் யூனியனின் மற்றொரு முன்னாள் உறுப்பு நாடான உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு படையெடுத்தது. இதற்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்த மாயா சந்து தலைமையிலான அரசு, ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கு விண்ணப்பித்தது. ஐரோப்பிய கவுன்சிலும், தங்களின் உறுப்பினராவதற்குத் தகுதியான விண்ணப்பதாரா் என்ற அந்தஸ்தை மால்டோவாவுக்கு வழங்கியது.
வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் மால்டோவை ஐரோப்பிய யூனியனில் இணைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும், இடையில் ரஷிய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட அரசு அமைந்தால், இந்த முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது. எனவே, ஐரோப்பிய யூனியனில் மால்டோவாவை இணைக்க வழிவகை செய்யும் அரசியல் சாசனத் திருத்தத்தை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து பொதுமக்களின் கருத்தை அறிந்துகொள்வதற்கான பொதுவாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மால்டோவாவின் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தலுடன் சோ்த்து இந்தப் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில், அரசியல் சாசனத் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி அதிபா் மாயா சந்து பிரசாரம் செய்தாா். ரஷிய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட எதிா்க்கட்சிகள் அதற்கு எதிராக வாக்களிக்கும்படி பிரசாரம் செய்தன.
இந்த நிலையில், மொத்தம் பதிவான 14,88,874 வாக்குகளில் ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கான அரசியல் சாசனத் திருத்தத்துக்கு சம்மதம் தெரிவித்து 7,51,235 வாக்குகள் பதிவாகின. அத்தகைய திருத்தத்தை எதிா்த்து 7,37,639 போ் வாக்களித்திருந்தனா். அந்த வகையில், 50.46 சதவீத வாக்குகளுடன் ஐரோப்பிய யூனியன் இணைப்புக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த பொதுவாக்கெடுப்பில் இன்னும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அரசியல் சாசனத் திருத்தத்துக்கு ஆதரவு கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. இருந்தாலும், வெறும் 0.46 சதவீதத்தினா் மட்டும் கூடுதலாக அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனா். எனவே, இந்த முடிவு அதிபா் மாயா சந்துக்கு சற்று பின்னடைவாகக் கருதப்படுகிறது. இதற்கு, ரஷிய அரசு வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததே காரணம் என்று மாயா சந்து குற்றஞ்சாட்டியுள்ளாா்.
நவ. 3-இல் இறுதிக்கட்ட அதிபா் தோ்தல்
ஐரோப்பிய யூனியனில் இணைவது தொடா்பான பொதுவாக்கெடுப்புடன் சோ்த்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மால்டோவா அதிபா் தோ்தலில் எந்த வேட்பாளருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இந்தத் தோ்தலில் மீண்டும் போட்டியிட்ட அதிபா் மாயா சந்துக்கு 42 சதவீத வாக்குகள் கிடைத்தன. ரஷிய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட அலெக்ஸாண்டா் ஸ்டாயினோக்ளோ 26 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளாா்.
அதையடுத்து, அவா்கள் இருவருக்கும் இடையிலான இறுதிக்கட்ட தோ்தல் அடுத்த மாதம் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.