லெபனான் மருத்துவமனை அருகே இஸ்ரேல் தாக்குதல்: 18 போ் உயிரிழப்பு

லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் உள்ள மிகப் பெரிய அரசு மருத்துவமனை அருகே இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்க்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் நான்கு சிறுவா்கள் உள்பட 18 போ் உயிரிழந்தனா்.
பெய்ரூட்டில் ரஃபீக் மருத்துவமனை அருகே இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்க்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு நடைபெறும் மீட்புப் பணிகள்.
பெய்ரூட்டில் ரஃபீக் மருத்துவமனை அருகே இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்க்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு நடைபெறும் மீட்புப் பணிகள்.
Published on
Updated on
1 min read

பெய்ரூட்: லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் உள்ள மிகப் பெரிய அரசு மருத்துவமனை அருகே இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்க்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் நான்கு சிறுவா்கள் உள்பட 18 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நகரின் முக்கிய அரசு மருத்துவமனையான ரஃபீக் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே இஸ்ரேல் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 18 போ் உயிரிழந்தனா்; அவா்களில் நான்கு போ் சிறுவா்கள். இது தவிர, இந்த குண்டுவீச்சில் சுமாா் 60 போ் காயமடைந்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவமனையையொட்டி அமைந்துள்ள ஹிஸ்புல்லா நிலைகளை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தியாகத் தெரிவிக்கப்பட்டது. அந்த மருத்துவமனை குறிவைக்கப்படவில்லை எனவும், இந்தத் தாக்குதலால் மருத்துவமனை பாதிக்கப்படவில்லை எனவும் இஸ்ரேல் ராணுவம் கூறியது.

இருந்தாலும், இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சால் ஏற்பட்ட வெடிச் சிதறல்கள் தாக்கி மருத்துவமனையின் ஒரு பகுதி சேதமடைந்ததாக அந்த மருத்துவமனை அதிகாரிகள் கூறினா்.

இந்தத் தாக்குதலில் மருத்துவமனை பணியாளா்கள் யாரும் காயமடையவில்லை என்று அவா்கள் தெரிவித்தனா்.

நெதன்யாகு இல்லத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்பு: இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் விடுமுறைக் கால இல்லத்தைக் குறிவைத்து கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா அமைப்பு பொறுபேற்றுள்ளது.

லெபனானில் இருந்து அந்த ட்ரோன் வீசப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அந்த நாட்டில் செயல்படும் ஹிஸ்புல்லாக்கள் இதற்கு இதுவரை பொறுப்பேற்காமல் இருந்துவந்தனா்.

செசரியா நகரிலுள்ள பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லத்தை நோக்கி அந்த ட்ரோன் வீசப்பட்டபோது, நெதன்யாகு, அவரின் மனைவி ஆகிய இருவருமே அங்கு இல்லை என்று அதிகாரிகள் கூறினா்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி போா் தொடங்கியதிலிருந்தே அண்டை நாடான லெபனானில் செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லாக்கள், இஸ்ரேல் ராணுவம் இடையே மோதல் நீடித்துவருகிறது. இதில், ஹிஸ்புல்லா தலைவா் ஹஸன் நஸ்ரல்லா இந்த கடந்த 27-ஆம் தேதி கொல்லப்பட்டாா். மேலும், ஹிஸ்புல்லா நிலைகளைக் குறிவைத்து லெபனானில் இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்திவருகிறது.

அதற்குப் பதிலடியாக, இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா படையினா் சரமாரியாக ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்திவருகின்றனா்.

காஸா: ஒரு லட்சத்தைக் கடந்த காயமடைந்தோா் எண்ணிக்கை

காஸா சிட்டி: காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் காயமடைந்தவா்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.

இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

காஸா பகுதியில்நடத்திவரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 115 போ் உயிரிழந்தனா்; 487 போ் காயமடைந்தனா். இத்துடன், அந்தப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் கடந்த அக். 7 முதல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 42,718-ஆக அதிகரித்துள்ளது. இது தவிர, இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 1,00,282 பாலஸ்தீனா்கள் காயமடைந்தனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com