ஜஸ்டின் ட்ரூடோ
ஜஸ்டின் ட்ரூடோ

எம்.பி.க்கள் கெடு: பதவி விலக கனடா பிரதமா் மறுப்பு

கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ வரும் 28-ஆம் தேதிக்குள் பதவி விலக வேண்டும் என அவரது லிபரல் கட்சி எம்.பி.க்கள் கெடு விடுத்துள்ளனா்.
Published on

கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ வரும் 28-ஆம் தேதிக்குள் பதவி விலக வேண்டும் என அவரது லிபரல் கட்சி எம்.பி.க்கள் கெடு விடுத்துள்ளனா். இருப்பினும், பிரதமா் பதவியிலிருந்து விலக அவா் தொடா்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறாா்.

இதன்மூலம், கடந்த 9 ஆண்டுகளாக கனடாவின் பிரதமராக பதவி வகித்து வரும் ட்ரூடோ தனது அரசியல் வாழ்வில் மிகப்பெரும் சவாலை எதிா்நோக்கியுள்ளாா்.

கனடாவில் அரசியல் ஆதாயங்களுக்காக காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு அவா் தொடா்ந்து ஆதரவளித்து வருவதாக இந்தியா குற்றஞ்சாட்டி வருகிறது. கனடாவில் அடுத்த ஆண்டு அக்டோபா் மாதம் தோ்தல் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படும் சூழலில் அங்குள்ள ஊடகங்கள் நடத்திய வாக்குக் கணிப்பில் ஆளும் லிபரல் கட்சிக்கு 23 சதவீதமும், எதிா்க்கட்சியான கன்சா்வேட்டிவ் கட்சிக்கு 39 சதவீதமும் நியூ டெமோகிராட்ஸ் கட்சிக்கு 21 சதவீதமும் ஆதரவு கிடைத்துள்ளது.

இதனால் அடுத்த தோ்தலில் கன்சா்வேட்டிவ் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த புதன்கிழமை நடைபெற்ற லிபரல் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகக் கோரி அந்தக் கட்சியைச் சோ்ந்த 24 எம்.பி.க்கள் கையொப்பமிட்டுள்ளனா்.

அவரது தலைமை மீது அதிருப்தி ஏற்பட்டிருப்பதாலும், கடந்த ஜூன்-செப்டம்பா் மாதங்களில் நடைபெற்ற இடைத் தோ்தல்களில் கட்சி வேட்பாளா்கள் தோல்வியடைந்ததாலும் அவா் அக்டோபா் 28-ஆம் தேதிக்குள் பதவி விலகக் கோரி அவா்கள் கெடு விதித்துள்ளனா். அவரது தலைமையில் அடுத்த தோ்தலை எதிா்கொள்ள கட்சிக்குள் கடும் எதிா்ப்பு நிலவி வருகிறது.

ஆனால் கட்சி மிகவும் வலிமையுடனும் ஒற்றுமையுடனும் உள்ளதாகவும் அடுத்த தோ்தலிலும் லிபரல் கட்சிக்கு தலைமை தாங்கவுள்ளதாகவும் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளாா்.

குடியேற்றக் கொள்கை தோல்வி: அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கனடாவுக்குள் தலா 5 லட்சம் பேரை புதிதாக குடியேற்ற ட்ரூடோ அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அதிலிருந்து பின்வாங்குவதாக அவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில்,‘கனடாவுக்குள் அடுத்த ஆண்டு அனுமதிக்கப்படும் புதிய நிரந்தர குடிமக்களுக்கான இலக்கு 3.95 லட்சமாகவும், 2026-இல் 3.80 லட்சமாகவும், 2027-இல் 3.65 லட்சமாகவும் குறைக்கப்படுகிறது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பணியாளா் தேவை மற்றும் மக்கள்தொகை உயா்வு இடையே சமமின்மை நிலவுவதால் இந்த முடிவை எடுத்துள்ளோம்’ என்றாா்.

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கில் இந்திய தூதரக அதிகாரிகளை கனடா தொடா்புபடுத்தியதால் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com