
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான கருத்துக் கணிப்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸைவிட முன்னாள் அதிபர் டிரம்புக்கு வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் தற்போதைய அமெரிக்க துணை அதிபரும் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸ் இருவருக்கும் இடையே கடுமையான இருமுனைப் போட்டி நிலவுகிறது.
இந்தத் தேர்தல் குறித்து வால் ஸ்ட்ரீட் பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பில் டொனால்ட் டிரம்ப் 47 சதவீத வாக்குகள் பெற வாய்ப்புள்ளதாகவும், அவரது போட்டியாளர் கமலா ஹாரிஸ் அவரைவிட 2 சதவீத வாக்குகள் குறைவாகப் பெற்று 45 சதவீத வாக்குகள் பெறவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிஎன்பிசி அமெரிக்க பொருளாதார நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் டொனால்ட் டிரம்ப் 48 சதவீத வாக்குகளும், கமலா ஹாரிஸ் 46 சதவீத வாக்குகளும் பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மாறாமல் இருக்கிறது.
ஜார்ஜியா, பென்சில்வேனியா, அரிசோனா, விஸ்கான்சின், நெவாடா, வட கரோலினா மற்றும் மிச்சிகன் ஆகிய ஏழு மாநிலங்களில் டிரம்ப் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார்.
ரியல்க்ளியர்பாலிடிக்ஸ் தெரிவித்துள்ள அறிக்கையில் அமெரிக்கா முழுவதும் டிரம்பைவிட கமலா ஹாரிஸ் 0.3 சதவீத வாக்குகள் அதிகமாக பெறுவார் என்று தெரிவித்துள்ளது. ஆனால், ஜார்ஜியா, பென்சில்வேனியா, அரிசோனா, விஸ்கான்சின், நெவாடா, வட கரோலினா மற்றும் மிச்சிகன் ஆகிய ஏழு மாநிலங்களில் 0.9 சதவீத வாக்குகள் டிரம்ப் முன்னிலையில் இருக்கிறார்.
அமெரிக்க நிதி பரிமாற்ற அமைப்பான கால்ஷியும் டிரம்ப் முன்னிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், தேர்தலில் டிரம்ப் 61 சதவீதமும், கமலா ஹாரிஸ் 39 சதவீத வாக்குகளும் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், அதிபர் தேர்தலுக்கு 12 நாள்களுக்கு முன்னதாக 3 கோடிக்கும் அதிகமான அமெரிக்க மக்கள் ஏற்கனவே வாக்களித்துள்ளனர். இவர்களில் 1.36 கோடி பேர் தபால் முறையில் வாக்களித்துள்ளனர். அவர்களில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் தபால் முறையில் வாக்களித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.